பல்லடம்:பல்லடம் அருகே, நுாறு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்து தலைமறைவான சகோதரர்களை கைது செய்ய வலியுறுத்தி, பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே வேலப்பகவுண்டம்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி மகன்கள் விஜயகுமார், 47 மற்றும் சிவகுமார், 40. இருவரும் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பலரை, நுால் வியாபாரத்தில் பங்குதாரராக சேர்த்து கொள்வதாக கூறி, அவர்களின் சொத்து பத்திரங்களை அடமானம் வைத்து, 100 கோடிக்கும் மேல் வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்தனர். பாதிக்கப்பட்டவர்கள், நேற்று பல்லடத்தில் உள்ள விஜயகுமாரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:
சிவகுமார், விஜயகுமார்மற்றும் இவரது மகன் ராகுல் பாலாஜி ஆகியோர்,எங்களை தொழில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி, வீட்டு, இடம், நில பத்திரங்களை வாங்கி கொண்டனர். அவற்றை பல வங்கிகளில் அடமானம் வைத்து, 100 கோடிக்கு மேல் கடன் வாங்கி மோசடி செய்துள்ளனர்.
பல்லடம் போலீசில் புகார் அளித்த ஒரு மாதத்துக்கு பின்னரே வழக்கு பதிவு செய்து, மூன்று மாதங்களாக அவர்களை தேடி வருகின்றனர். விசாரணைக்குஆஜர்படுத்துமாறு பல்லடம் கோர்ட் ஒரு மாதத்துக்கு முன் பிடிவாரன்ட் பிறப்பித்தும், போலீசார் இன்னும் தேடுகின்றனர்.
மற்றொருபுறம், எங்கள் சொத்துக்களை ஜப்தி செய்ய வங்கியினர் தயாராகி வருகின்றனர். தலைமறைவாக உள்ளதாக கூறும் சிவகுமாரை, சில தினங்களுக்கு முன் பல்லடத்தில் நாங்களே பார்த்துள்ளோம். போலீசாரிடம் கேட்டால், நீங்களே கண்டுபிடித்து பிடித்து தாருங்கள் என்கின்றனர். போலீஸ் உயரதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, மோசடியில் ஈடுபட்ட சகோதரர்களை பிடிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தகவல் அறிந்து வந்த பல்லடம் போலீசார் பாதிக்கப்பட்டவர்களுடன் பேச்சு நடத்தினர். இருப்பினும், அவர்கள் கலைந்து செல்லாது போராட்டத்தை தொடர்ந்தனர்.
கோவையை சேர்ந்த பிரியா கூறுகையில், ''சாதாரண திருட்டு வழக்குகளில் கூட, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும் போலீசார், கோடிக்கணக்கில் சுருட்டிக்கொண்டு தலைமறைவாக உள்ள சகோதரர்களை பிடிக்காமல் தாமதப்படுத்தி வருகின்றனர். கோர்ட், பிடிவாரன்ட் பிறப்பித்தும், போலீசார் கைது செய்யாதது ஆச்சரியமாக உள்ளது. பத்திரம், பணம் மற்றும் குடும்பத்தை இழந்து நிற்கிறேன். இதற்கு மேல் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை,'' என்று கண்ணீர் மல்க கூறினார்.