தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே இறந்ததாக கருதப்பட்டவர் ஈமச்சடங்கு நேரத்தில் உயிருடன் வந்ததால் பரபரப்பு நிலவியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அடுத்த ஆழ்வார் மலை வனப்பகுதியையொட்டி, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் கிடந்தது. இறந்தவர் யார் என்பதை அறிய அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு, இறந்தவரின் புகைப்படத்தை அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், எலவனாசூர்கோட்டை அடுத்த நெடுமானுார் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவரை ஒரு வாரமாக காணவில்லை என, அவரது மகன் கவுண்டமணி செந்தில்,35, தேடி வந்தார்.
தியாகதுருகம் அருகே முதியவர் இறந்து கிடந்த தகவலறிந்த கவுண்டமணி செந்தில், அங்கு சென்று பார்த்தார். அது தனது தந்தை சுப்ரமணியன் தான் எனக் கூறி, போலீசாரின் அனுமதியுடன் இறுதி சடங்கு செய்வதற்காக சடலத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். நேற்று மதியம் 3:00 மணியளவில் ஈமச் சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.
அப்போது, காணாமல் போன சுப்ரமணியன் திடீரென அங்கு உயிருடன் வந்தார். அவரை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடனடியாக தியாகதுருகம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் அளித்தனர்.
அங்கு வந்த போலீசார், முதியவரின் சடலத்தை கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு எடுத்துச் சென்றனர்.
இறந்தவர் யார் என போலீசார் மீண்டும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் எலவனாசூர் கோட்டை பகுதியில் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.