விழுப்புரம் : விழுப்புரம் 'தாட்கோ' மாவட்ட மேலாளர், கடனுதவி கேட்டு விண்ணப்பித்த இளைஞரை அவமதித்து, ஒருமையில் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது..
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பாவந்துார் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சிவனேசன், மாட்டு பண்ணை அமைக்க கடனுதவி கேட்டு, கடந்த 3 மாதத்துக்கு முன்பு, விழுப்புரம் மாவட்ட தாட்கோ அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
இதற்கான நேர்காணல், சில தினங்களுக்கு முன்பு நடந்தது. அப்போது, திட்ட அறிக்கை தயாரித்து வழங்கினார். அதில், தனது நிலத்தில் மாட்டு கொட்டகை அமைத்து, மாடுகள் வளர்ப்பதற்கு ரூ.7 லட்சம் கடனுதவி கேட்டு, உரிய ஆவணங்களையும் இணைத்திருந்தார்.
சில நாட்கள் கழித்து, சிவனேசன், 'தாட்கோ' அலுவலகத்துக்குச் சென்று, கடனுதவி குறித்து கேட்டுள்ளார்.
அப்போது அவரிடம் விசாரித்த, தாட்கோ மாவட்ட மேலாளர் மணிமேகலை, “மேய்க்கிறது மாடு, இதுக்கு டிகிரி சர்டிபிகேட் எல்லாம் வச்சிருக்கியா நீ” என்று பேசியதோடு, 'வங்கியில் கணக்கு வைத்திருந்தால் போதாது, டெபாசிட் இருக்க வேண்டும், அப்போது தான், கடன் கொடுப்பார்கள்'' என, ஒருமையிலும், இழிவுபடுத்தும் வகையிலும் பேசும் வீடியோ, கடந்த இரு தினங்களாக சமூக வலைதளத்தில் பரவியது.
இதனையடுத்து, விழுப்புரம் கலெக்டர் பழனி, நேற்று தாட்கோ மேலாளர் மணிமேகலையை அழைத்து விளக்கம் கேட்டுள்ளார். இது குறித்து, கலெக்டர் பழனியிடம் கேட்டபோது, சம்பவம் குறித்து விசாரித்து, அதன் அறிக்கையை தாட்கோ மேலாண் இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும்' என்றார்.