கள்ளக்குறிச்சி: ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கஞ்சா வியாபாரி, தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம், அனகப்பள்ளி மாவட்டம், நரசிபட்டணம் அடுத்த கப்பாடா கிராமத்தை சேர்ந்தவர் பெட்ல சன்யாசி மகன் பாபு நாயுடு (எ) பெட்ல அப்பல நாயுடு,48; கஞ்சா வியாபாரி.
இவர் கடந்த பிப்., 14ம் தேதி ஆந்திராவிலிருந்து திருச்சிக்கு கஞ்சா கடத்தியபோது, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை பஸ் நிலையத்தில், மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 26 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பெட்ல அப்பல நாயுடு கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால், அவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி., மோகன்ராஜ் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் கலெக்டர் ஷ்ரவன்குமார் கஞ்சா வியாபாரி பெட்ல அப்பல நாயுடுவை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். கடலுார் மத்திய சிறையில் உள்ள பெட்ல அப்பல நாயுடுவிடம் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்வதற்கான ஆணையை போலீசார் வழங்கினர்.