கடலுார் : பொய்யான சாதி சான்றிதழ் கொடுத்து பதவியில் உள்ள கம்மாபுரம் ஒன்றிய சேர்மன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கடலுார் எஸ்.பி.யிடம் அனைத்து கட்சிகளை சேர்ந்த 13 ஒன்றிய கவுன்சிலர்கள் புகார் மனு கொடுத்தனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுவில் 20 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். ஒன்றியக் குழு தலைவராக ஊமங்கலத்தைச் சேர்ந்த விஜயக்குமார் மனைவி மேனகா உள்ளார். கம்மாபுரம் ஒன்றியக் குழு தலைவர் பதவியை அட்டவணை இன பெண்ணுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்திருந்தது.
மேனகா கிறிஸ்துவ சமூகத்தை சேர்ந்தவர். அது ஓ.பி.சி., பிரிவில் வருகிறது. ஆனால் மேனகா கிறிஸ்துவ சமூகம் என்பதை மறைத்து, எஸ்.சி., என விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் சாதிச் சான்று பெற்றுள்ளார். பொய்யான சாதிச் சான்று மூலம் மேனகா, கம்மாபுரம் ஒன்றியக் குழு தலைவர் பதவியில் உள்ளார் என புகார் எழுந்தது.
இதுகுறித்து பல்வேறு கட்சிகளை சேர்ந்த 13 ஒன்றிய கவுன்சிலர்கள் சேர்ந்து, பொய்யான சான்றிதழ் கொடுத்து பதவியில் உள்ள ஒன்றிய சேர்மன் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளிடமும், ஊமங்கலம் போலீசிலும் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
இதை தொடர்ந்து பொய்யான சான்று கொடுத்து பதவியில் உள்ள மேனகா மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஒன்றிய கவுன்சிலர்கள் 13 பேரும் சேர்ந்து நெய்வேலி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி பிரவின் குமார், இந்த புகார் குறித்து ஊமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்க உத்தரவிட்டார்.
அதன்படி ஒன்றிய கவுன்சிலர்கள் ஊமங்கலம் போலீசில் மீண்டும் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் நேற்று ஒன்றிய கவுன்சிலர் சிவசுப்ரமணியன் தலைமையில் அனைத்து கட்சியை சேர்ந்த 13 கவுன்சிலர்கள் கடலுார் எஸ்.பி., ராஜாராமை நேரில் சந்தித்து ஆதாரங்களுடன் புகார் மனு கொடுத்தனர்.
புகார் குறித்து ஆய்வு செய்த எஸ்.பி., ஒன்றிய சேர்மன் மேனகா குறித்து விசாரணை நடத்த நெய்வேலி டி.எஸ்.பி.,க்கு பரிந்துரை செய்துள்ளார்.