கடலுார் : கடலுாரில் பெண்ணிடம் வங்கி ஏ.டி.எம்., கார்டை மாற்றி கொடுத்து, ரூ. 52 ஆயிரம் அபேஸ் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் சோனாங்குப்பம் சுனாமி நகரை சேர்ந்தவர் ரவி மனைவி கனிமொழி, 42; அம்மா உணவக ஊழியர். இவர், கடந்த 4ம் தேதி கடலுார் முதுநகர் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்க சென்றார்.
பணம் எடுக்கத் தெரியாததால், அங்கு நின்றிருந்த வாலிபரிடம் ஏ.டி.எம்., கார்டை கொடுத்து, பணம் எடுத்து தரும்படி கூறினார். அந்த நபர் ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் எடுப்பதுபோல் நடித்து, பணம் வரவில்லை என கூறி, வேறு ஏ.டி.எம்., கார்டை கொடுத்து விட்டு சென்றார்.
சிறிது நேரத்தில் கனிமொழியின் வங்கிக் கணக்கில் ரூ. 52 ஆயிரம் பணம் எடுத்ததாக எஸ்.எம்.எஸ்., வந்தது. இதுகுறித்து அவர், கடலூர் முதுநகர் போலீசில் புகார் அளித்தார்.
முதுநகர் ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்., கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்ததில், அந்த நபர் திருப்பாதிரிப்புலியூர் தங்கராஜ் நகர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த, கண்ணன் மகன் குமரன், 34; என்பது தெரியவந்தது. அதையடுத்து, குமரனை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.5 ஆயிரம் பணம், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள மொபைல் போன் மற்றும் ஒரு ஏ.டி.எம்., கார்டை பறிமுதல் செய்தனர்.
குமரன், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஏ.டி.எம்., மையத்தில் நின்று கொண்டு, அங்கு வரும் முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு பணம் எடுத்து கொடுப்பது போல் நடித்து, மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.