விழுப்புரம் : திண்டிவனம் அருகே தானாக தீப்பிடித்து எரியும் நோய் பாதித்த சிறுவன் குடும்பத்துக்கு, தேசிய அட்டவணை இனத்தவர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதால், அரசு சார்பில் வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த நெடிமோழியனூரை சேர்ந்தவர் கருணாகரன் மனைவி ராஜேஸ்வரி. இவர், கடந்த 2013ம் ஆண்டு, தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார். இவரது, மகன்கள் ராகுல், 10; ஜெயராமச்சந்திரன், 6; ஆகியோரது உடம்பில், அடிக்கடி தானாக தீப்பிடித்து எரியும் அரிய நோய் பாதிப்பு இருந்ததால், அரசு சார்பில் உயர் சிகிச்சை வழங்கப்பட்டது. எனினும், ஜெயராமச்சந்திரன் கடந்த 16.2.2016ல் உயிரிழந்தார்.
தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் உதவி வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட ராகுலுக்கு மாதந்தோறும் ரூ.4,000 பராமரிப்பு நிதியுதவி வழங்கப்படுகிறது.
தற்போது ராகுல், நெடிமோழியனுார் அரசுப் பள்ளியில், 5ம் வகுப்பு படித்து வருகிறார்.
வீட்டு மனைப்பட்டா கேட்டு ராகுல் குடும்பத்தினர் கடந்த மாதம் கலெக்டரிடம் மனு கொடுத்திருந்தனர்.
இது குறித்து புதுச்சேரி பா.ஜ., செய்தி தொடர்பாளர் வீரராகவன், தேசிய அட்டவணை இனத்தவர் ஆணைய மண்டல இயக்குனருக்கு, மனு அனுப்பினார்.
இதைத்தொடர்ந்து, தேசிய அட்டவணை இனத்தவர் ஆணையம் வீட்டு மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்பினர்.
நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில், கலெக்டர் பழனி வீட்டு மனை பட்டாவை ராஜேஸ்வரியிடம் வழங்கினார். டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவிதேஜா, ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் உடனிருந்தனர்.