பழநி-கொசுவால் போச்சு துாக்கம், நாய்களால் உருவாகுது பீதி என, பழநி நகராட்சி 6வது வார்டு மக்கள் அல்லல் படுகின்றனர்.
இந்திரா நகர், புது தாராபுரம் ரோடு, இட்டேரி ரோடு உள்ளடக்கிய இந்த வார்டை இணைக்கும் இட்டேரி ரோடு, புது தாராபுரம் ரோடு பகுதிகளில் அடிக்கடி வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் இங்குள்ளோர் சிரமத்தை சந்திக்கின்றனர். கொசு தொல்லை மிக அதிகமாக நோய் தொற்று ஏற்படுகிறது. தெரு நாய்கள் தொல்லைகள் மக்கள் பீதியில் உள்ளனர். இப்பகுதியில் கண்காணிப்பு கேமரா, பாதாள சாக்கடை திட்டம் ஆகியவற்றை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்கின்றனர் இப்பகுதியினர்.
பள்ளி சிறார்கள் பீதி
ஆனந்த்,தொழிலாளி,இந்திராநகர் : வீதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளதால் இப்பகுதி மக்கள் அச்சத்துடன் நடமாடிய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள் இதனால் சிரமம் அடைகின்றனர்.
பகலிலும் கடிக்கிறது
மணிகண்டன், வியாபாரி: இந்திரா நகர் சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் அதிகரிக்க வேண்டும். கொசு தொல்லையால் இரவில் நிம்மதியாக துாங்க முடியவில்லை. பகலிலும் கடித்து குதறுகிறது . இதை தடுக்க மருந்து தெளிக்க வேண்டும்.
நெரிசலால் அவதி
சிவலிங்கம், ரைஸ் மில் உரிமையாளர்: கவுண்டர் இட்டேரி ரோடு பகுதி தற்போது அதிக போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகிறது. சாலை ஓரங்களில் உள்ள சாக்கடைகளில் தடுப்பு சுவர் இல்லாததால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
தெரு நாய்களுக்கு விரைவில் தீர்வு
வீரமணி, கவுன்சிலர் (தி.மு.க.,): வார்டில் அவ்வப்போது ஏற்படும் பிரச்னைகள் சரி செய்யப்படுகிறது. குப்பை முறையாக அகற்றப்படுகிறது. தெரு நாய்கள் தொல்லை குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். கண்காணிப்பு கேமரா அமைக்கப்படுள்ளது. இவற்றை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாதாள சாக்கடை திட்டம் பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் வழிகாட்டுதல்படி விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளது, என்றார்.