மதுரை: மதுரை, திருச்சி ஆவினில் பணி நீக்கத்திற்கு எதிராக தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. பால் உற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை கமிஷனர்/சம்பந்தப்பட்ட பொதுமேலாளர்கள் மீது தமிழக அரசின் கால்நடைத்துறை முதன்மைச் செயலர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய ஒருங்கிணைந்த ஆள்சேர்ப்பு வாரியத்தை உருவாக்க வேண்டும் என உத்தரவிட்டது.
திருச்சி பூவலுார் ஆனந்த்ராஜ் தாக்கல் செய்த மனு:
பி.இ., முடித்துள்ளேன். திருச்சி ஆவினில் எழுத்துத் தேர்வு, நேர்காணலுக்கு பின் முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் பணியில் 2021 மார்ச் 1 ல் நியமிக்கப்பட்டேன். 2020-21 ல் ஆவின் பணி நியமனங்களில் முறைகேடு நடந்துள்ளதாகக்கூறி விசாரணை நடந்தது. என்னை பணி நீக்கம் செய்து ஜன., 3 ல் ஆவின் பொது மேலாளர் உத்தரவிட்டார்.
அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் இட ஒதுக்கீட்டை பின்பற்றி, விதிகள்படி பணி நியமனம் நடந்துள்ளது. விசாரணை முறையாக நடைபெறவில்லை. பணி நீக்கம் செய்ததற்கு தகுந்த காரணத்தை குறிப்பிடவில்லை. பாரபட்சம், உள்நோக்கம் உள்ளது. பணி நீக்க உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு ஆனந்த்ராஜ் குறிப்பிட்டார். இதுபோல் திருச்சி, மதுரை ஆவினில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் சிலர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார்.
மனுதாரர்கள் தரப்பு: அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 2019 நவ.,22 ல் அறிவிப்பு வெளியானது. எழுத்துத் தேர்வு நடந்தது. வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். அதில் தேர்வானோர் பல்வேறு பணியிடங்களில் நியமிக்கப்பட்டனர். அது சட்டம், விதிகள்படி நடந்தது. மனுதாரர்கள் மற்றும் பிறர் 2022 மார்ச் 29 ல் விசாரணைக்கு ஆஜராகினர். அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களில் சிறப்பு துணை விதிகளை பின்பற்றாமல் நியமனம் நடந்ததாகக்கூறி அவர்களின் நியமன உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது.
மனுதாரர்களை பின் வாசல் வழியாக நுழைந்தவர்கள் என வகைப்படுத்துவது நியாயமற்றது. முறையான தேர்வு மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு தரப்பு: சட்ட நடைமுறைகளை பின்பற்றி நியமனம் மேற்கொள்ளவில்லை. நியமனங்களுக்காக 2019 ல் வேலைவாய்ப்பு அலுவலகங்களிலிருந்து பட்டியல் கோரப்பட்டது. ஆனால் ஒன்றரை ஆண்டுகளுக்குமேல் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
2020 இறுதியில் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு, 2021 ல் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன. வேலைவாய்ப்பு அலுவலகம் வழங்கிய பட்டியல் 6 மாதங்களுக்கு பின் காலாவதியாகி, உரிய அதிகாரியிடம் அதற்குரிய கால நீட்டிப்பை பெறாவிடில் அப்பட்டியலை பயன்படுத்த முடியாது. ஆனால் அப்பட்டியலை பணியிடங்களை நிரப்ப பயன்படுத்தியது சட்டவிரோதம்.
நேர்காணல் நடந்த அன்றே பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. இது முழு தேர்வு நடைமுறையிலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பணியிடங்களை நிரப்ப பால் உற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை கமிஷனரிடம் முன் அனுமதி பெற வேண்டும். அத்தகைய அனுமதி பெறவில்லை. பணி நியமனம் மேற்கொண்ட பின்னரே ஒப்புதல் பெறப்பட்டது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதி: மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டு மனுதாரர்கள் பணியில் சேர வைக்கப்பட்டனர் என அரசு தரப்பு கூறுகிறது. தேர்தல் நடத்தி புதிய அரசு ஆட்சிக்கு வரும் வரை, நியமனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நியமனங்களுக்கு எதிராக எவ்வித புகார்களும் இல்லை என மனுதாரர்கள் கூறுகின்றனர்.
திடீரென விசாரணையை துவங்கி, மனுதாரர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உயர் அதிகார மட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக நியமனங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டதா என்பதுதான் இந்நீதிமன்றத்தின் மனதில் எழுந்துள்ள கேள்வி.
துவக்கத்தில் தேர்தல் காரணமாக மனுதாரர்களை பணியமர்த்த ஆவின் நிர்வாகம் அவசரம் காட்டியுள்ளது. நியமனத்திற்கு முந்தைய நிலை மற்றும் நியமனத்திற்குப் பிந்தைய மாறுபட்ட நிலைப்பாட்டிற்கான காரணத்தை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இந்நீதிமன்றம் இல்லை.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் சட்டம், விதிகளின்படி நடைபெறவில்லை. நியமனங்களில் விதி மீறல்கள் பெரிய அளவில் உள்ளன. ஆவின் நிர்வாகத்தின் பொது மேலாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனக்குறைவாக செயல்பட்டுள்ளனர்.
பெரிய சதித்திட்டத்தை அறியாமல் பால் கறக்கும் கால்நடைகளாக அழைத்துச் செல்லப்பட்டு, பின் மனுதாரர்கள் துாக்கி எறியப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் செயல், மனுதாரர்களின் வாழ்வாதாரத்தை பறித்துள்ளது.
மனுதாரர்கள் எந்தத் தவறும் செய்யாமல் தங்கள் வாழ்க்கையைத் தொடர வேறு வழியின்றி தெருக்களில் துாக்கி எறியப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்த தவறால் மனுதாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மனுதாரர்களுக்கு கண்டிப்பாக அனுதாபம் காட்ட வேண்டும்.
துணை விதிகளை பொருட்படுத்தாமல் மனுதாரர்களை நியமித்ததன் மூலம் பொது மேலாளர் பிரச்னைக்குக் காரணமாகிறார். இது முழுக்க முழுக்க சட்டம் விதிகளுக்கு முரணானது. அவர் தற்போது சட்டம், விதிகளுக்குட்பட்டு நியமன நடைமுறைகள் மேற்கொள்ளவில்லை என கூறியது கவலையளிக்கிறது.
அதிகாரிகளின் சட்டவிரோத செயல்களை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. பணி நியமனங்களில் கூட்டுறவு சங்கங்களுக்குரிய கட்டுப்பாடற்ற அதிகாரங்கள் இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு வழி வகுக்கின்றன. இது மக்களை பாதிக்கிறது. நீதியின் நலன் கருதி இந்நீதிமன்றம் கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களை பிறப்பிக்கிறது:
* அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
* வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வழங்கிய பட்டியலின் அடிப்படையில் மனுதாரர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பணிமூப்பை மீண்டும் அதே நிலையில் தக்க வைக்க வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் தகுந்த வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.
* இவ்வழக்கில் பால் உற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை கமிஷனர்/ அந்தந்த பொதுமேலாளர்கள் மீது தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* கூட்டுறவு சங்கங்களுக்கு பொதுப் பணியாளர்களை தேர்வு செய்ய சட்டம், துணை விதிகளில் திருத்தம் செய்து ஒருங்கிணைந்த ஆள்சேர்ப்பு வாரியத்தை உருவாக்க 3 மாதங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* தேர்வு வாரியம் அமைக்கப்படும்வரை கூட்டுறவு சங்கங்களில் பணி நியமனம் மேற்கொள்ளப்படாது. இவ்வாறு உத்தரவிட்டார்.