கரூர்: கரூர் காய்கறி மார்க்கெட்டிற்கு தக்காளி, சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதால், அவற்றின் விலை குறைந்துள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது, காய்களின் விலை உயர தொடங்கியது. அப்போது, கரூரில், முதல் தர தக்காளி, 40 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம், 80 ரூபாய்க்கும் விற்பனையானது. தற்போது, வரத்து அதிகரித்துள்ளதால், தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை குறைந்துள்ளது.
இதுகுறித்து, கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் கூறியதாவது:
பனியின் தாக்கம் காரணமாக, தக்காளி செடியில் பூக்கள் உதிர்ந்தது. இதனால், தக்காளி வரத்து குறைந்தது. அதேபோல், கடந்த ஆண்டு நவம்பர் மாதம், சாகுபடி செய்யப்பட்ட சின்ன வெங்காயம், மார்க்கெட்டுக்கு முழுமையாக வரவில்லை. இதனால், தக்காளி, சின்ன வெங்காயம் விலை உயர்ந்தது.
தற்போது, திருப்பூர், கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து தக்காளி, சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பொங்கல் பண்டிகையின் போது, கிலோ, 80 ரூபாய்க்கு விற்ற சின்ன வெங்காயம், 35 ரூபாய் முதல், 40 ரூபாய் வரையிலும், 40 ரூபாய்க்கு விற்ற தக்காளி, 10 ரூபாய் முதல், 12 ரூபாய் வரையிலும் விலை குறைந்து, விற்பனையாகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.