கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அருகே, பிள்ளபாளையத்தில், விவசாய
தோட்டத்தில், விஷம் வைக்கப்பட்டதில், ஏற்கனவே 8 மயில்கள் இறந்த நிலையில், தற்போது மேலும் 6 மயில்கள்
உயிரிழந்துள்ளன.
கிருஷ்ணராயபுரம் அருகே, பிள்ளபாளையத்தில், மகிளிப்பட்டியை சேர்ந்த முருகானந்தம், 40, என்பவர், ஒரு விவசாய தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து, ஒரு ஏக்கர் பரப்பளவில் பீர்க்கன்காய் பயிரிட்டுள்ளார். இவரது தோட்டத்தில், நேற்று முன்தினம், 8 மயில்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டன. தகவலறிந்த வனத்துறையினர், மயில்களின் சடலத்தை மீட்டனர்.
மேலும், முருகானந்தத்திடம் விசாரித்ததில், பீர்க்கன்காய் செடிகளுக்கு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த மருந்து அடித்ததாகவும், இதன் காரணமாக மயில்கள் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்.
பின்னர், கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ததில், மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து முருகானந்தத்திடம் வனத்துறையினர் மீண்டும் விசாரணை நடத்தினர். இதில், பயிர்கள் பாதிக்கப்படுவதால், மயில்களுக்கு நெல்லில் விஷம் வைத்து கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, முருகானந்தத்தை வனத்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், நேற்று, அதே தோட்டத்தில் மேலும் 6 மயில்கள் இறந்து கிடந்தது. இதையடுத்து, வனத்துறையினர் அங்கு வந்து, மயில்களின் சடலத்தை மீட்டு, மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து விவசாய தோட்டத்தில் மயில்கள் உயிரிழக்கும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.