காவல் துறை சார்பில்
சிறப்பு மனு விசாரணை முகாம்
கரூர் மாவட்ட காவல் துறை சார்பில், சிறப்பு மனு விசாரணை முகாம், தான்தோன்றிமலையில், தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
மனு விசாரணை முகாமை, கரூர் எஸ்.பி., சுந்தரவதனம் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, புகார்தாரர் மற்றும் எதிர் மனுதாரர்களிடம், ஸ்டேஷன் வாரியாக போலீசார் விசாரணை மற்றும் குறைகளை கேட்டறிந்தனர். இறுதியாக, 101 மனுக்கள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு, 51 மனுக்கள் மீதான விசாரணை முடித்து வைக்கப்பட்டது.
முகாமில், ஏ.டி.எஸ்.பி., கண்ணன், டி.எஸ்.பி.,க்கள் சரவணன், முத்தமிழ் செல்வன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.
குட்கா விற்பனை
9 பேர் கைது
கரூர் மாவட்டத்தில், குட்கா விற்ற, ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் டவுன், வெங்கமேடு, தான்தோன்றிமலை, லாலாப்பேட்டை, தோகைமலை ஆகிய பகுதிகளில், நேற்று முன்தினம், சட்டம் - ஒழுங்கு போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலை, குட்கா பொருட்களை விற்றதாக கந்தசாமி, 72; சாமிநாதன், 51; ஆனந்த் கிருஷ்ணா, 54; செல்வம், 54; ராஜலிங்கம், 45; சங்கர், 48; அருண்குமார், 35; தமிழ்செல்வன், 30; கண்ணன், 62; ஆகிய ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர்.
மகள் மாயம்
தந்தை புகார்
தரகம்பட்டியை அடுத்த, வரவணை பஞ்., சுண்டுக்குழிபட்டியை சேர்ந்தவர் முருகேசன், 47. விவசாயி, இவரது மகள் சங்கீதா, 28. இவருக்கு, அதே ஊரை சேர்ந்த கருணாகரன் என்பவருடன் திருமணமாகி, இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 27ம் தேதி மதியம் 1:00 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்ற சங்கீதா, அதன் பிறகு மீண்டும் வீட்டுக்கு திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, தனது மகளை கண்டுபிடித்து தருமாறு, முருகேசன் கொடுத்த புகாரின் படி, சிந்தாமணிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
லாலாப்பேட்டையில்
மீன் விற்பனை சரிவு
லாலாப்பேட்டையில் நேற்று மீன் விற்பனை சரிந்தது.
கிருஷ்ணராயபுரம் அருகே, லாலாப்பேட்டை காவிரி ஆற்றில், மீனவர்கள்
மீன் பிடித்து வந்து, லாலாப்பேட்டை, பழைய கரூர் - திருச்சி நெடுஞ்சாலை அருகில் உள்ள வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். நேற்று காலை, காவிரி ஆற்றில் இருந்து பிடித்துவரப்பட்ட ஜிலேபி மீன், கிலோ 120 ரூபாய்க்கு
விற்பனையானது.
நேற்று குறைந்த அளவிலேயே மீன் விற்பனை செய்யப்பட்டதாக, மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்
பட்டது.
சூதாட்டத்தில் ஈடுபட்ட
4 பேர் கைது
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே, பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
அரவக்குறிச்சி போலீஸ் எஸ்.ஐ., பெரியசாமி உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம், ஈசநத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக, மகேந்திரன், 42; அருண்குமார், 32; அரவிந்த், 26; ஜீவானந்தம், 21; உள்பட நான்கு பேரை, அரவக்குறிச்சி போலீசார் கைது
செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து, சீட்டு கட்டுகள், 600 ரூபாய் ஆகியவற்றை போலீசார் பறிமுதல்
செய்தனர்.
இரும்பூதிப்பட்டியில்
சிறப்பு மருத்துவ முகாம்
இரும்பூதிப்பட்டி நுகர்பொருள் வணிப கிடங்கு வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
கிருஷ்ணராயபுரத்தை அடுத்த பஞ்சப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை நிர்வாகம் சார்பில், இரும்பூதிப்பட்டி நுகர்பொருள் வணிப கிடங்கு வளாகத்தில் நேற்று சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
இதில், அங்கு பணிபுரியும் அலுவலர்கள், தொழிலாளர்களுக்கு, காய்ச்சல், ரத்த அழுத்தம்,
சர்க்கரை நோய் ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, டாக்டர் பார்த்திபன் மருத்துவ ஆலோசனை வழங்கினார். மேலும் மருந்து, மத்திரைகளும் வழங்கப்பட்டன. முகாமில் மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், உள்பட பலர் கலந்து
கொண்டனர்.
கரூர் ஒன்றிய மா.கம்யூ.,
கட்சி குழு கூட்டம்
கரூர் ஒன்றிய மா.கம்யூ., கட்சி குழு கூட்டம், மூத்த உறுப்பினர் பூரணம் தலைமையில், புகழூரில் நடந்தது.
அதில், புகழூர் நகராட்சி, வேலாயுதம்பாளையம் புறவழிச்சாலையில் பள்ளிகள், வீடுகள், சர்ச் பகுதியில் உள்ள, டாஸ்மாக் கடையை அகற்ற, கரூர் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்கும் வகையில் போராட்டம் நடத்துவது, டாஸ்மாக் கடையை அகற்றாத பட்சத்தில், மா.கம்யூ., சார்பில் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், கரூர் ஒன்றிய மா.கம்யூ., செயலாளர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.