எலச்சிபாளையம்: எலச்சிபாளையத்தில், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில், நேற்று, எலச்சிபாளையம் பஸ் ஸ்டாப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் மணிமேகலை தலைமை வகித்தார். இதில், பத்து குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மையங்களை, 'மினி' மையமாக மாற்றுவதை கைவிட வேண்டும்; காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்; கோடை விடு
முறையை அங்கன்வாடி மையங்களுக்கும் விடவேண்டும்; அரசு ஊழியர்களை போல், அங்கன்வாடி பணியாளர்களுக்கும், ஓராண்டு மகப்பேறு விடுப்பு அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைசெயலாளர் சுரேஷ், ஒன்றிய செயலாளர் சுசீலா, தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் தங்கராஜூ, ஒன்றிய பொருளாளர் நித்தியகல்யாணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல், நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில துணைதலைவர் ஜெயக்கொடியும், சேந்தமங்கலத்தில், ஒன்றிய தலைவர் சித்ரா, செயலாளர் அனுராதா தலைமையிலும், எருமப்பட்டியில், ஒன்றிய தலைவர் பரமேஸ்வரி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.