நாமக்கல்: 'ராமநவமி முடிவடைவதால், முட்டை விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால், அறிவிக்கப்படும், 'மைனஸ்' விலைக்கு மேல், பண்ணையாளர்கள் விற்பனை செய்ய வேண்டாம்' என, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்) நாமக்கல் மண்டல தலைவர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாளை (இன்று), ராமநவமி
முடிவடைவதால், அனைத்து மண்டலங்களிலும், முட்டை விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால், அனைத்து மண்டலங்களும், இனி விலை குறைப்பதில்லை என, முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நாமக்கல் மண்டலத்தில், முட்டை கொள்முதல் விலை, 450 காசுகளாகவே தொடர்வது என, முடிவு எடுக்கப்பட்டது.
வரும் நாட்களில் முட்டை விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், பண்ணையாளர்கள் அறிவிக்கப்படும், 'மைனஸ்' விலைக்கு மேல், கொடுக்க வேண்டாம். கடும் வெயில் காரணமாக, உற்பத்தி சற்று குறைந்துள்ளது. வரும் நாட்களில், அறிவிக்கப்பட்ட மைனஸுக்கு மேல் முட்டை விற்க வேண்டிய அவசியம் இல்லை. பண்ணையாளர்கள், சந்தை நிலவரத்தை அனுசரித்து, அதிக மைனசிற்கு விற்காமல், நல்ல விலைக்கு முட்டையை விற்று பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.