நாமக்கல்: நாமக்கல், நரசிம்மர் சுவாமி திருத்தேர் பெருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்., 6ல், தேரோட்டம் கோலாகலமாக நடக்கிறது.
ஆஞ்சநேயரால் கொண்டு வரப்பட்ட சாலிகிராம், நாமக்கல் நகரின் மையத்தில், ஒரே கல்லினால் உருவான மலையாக விளங்கி வருவதாக ஐதீகம். மலையின் மேற்கு பகுதியில், நாமகிரி தாயார் உடனுறை நரசிம்மர் கோவில், மலையை குடைந்து குடவறை கோவிலாக உள்ளது.
மலையின் கிழக்கு பகுதியில், அரங்கநாயகி தாயாரோடு அரங்கநாதர் கோவில், குடவறை கோவிலாக அமைந்துள்ளது. இங்கு, கார்க்கோடகன் என்ற பாம்பின் மீது அனந்த சயனம் கொண்ட நிலையில், அரங்கநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
ஒரே கல்லால் உருவான மலையின் இரு
புறமும், குடவறை கோவில்களை கொண்டு, சிறப்பு பெற்றத்தலமாக நாமக்கல் விளங்குகிறது. கோட்டை பகுதியில், மலைக்கு மேற்குபுறத்தில், 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர், நாமக்கல் மலையையும், நரசிம்மரையும் வணங்கிய நிலையில், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். புராண சிறப்பு பெற்ற இக்கோவில்கள், கி.பி., 8ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டுள்ளன. ஆண்டுதோறும், இந்த மூன்று கோவில்களிலும், ஒரே நேரத்தில் பங்குனி திருத்தேர் பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி, இந்தாண்டு தேர்த்திருவிழா நேற்று காலை, 11:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. நகராட்சி தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, இணை ஆணையர் இளையராஜா, அறங்காவலர் குழுவினர், கவுன்சிலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமும் காலை, 8:00 மணிக்கு நரசிம்மரும், அரங்கநாதரும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். காலை, 11:00 மணிக்கு குளக்கரை நாமகிரி தாயார் மண்டபத்தில் ஸ்நபன திருமஞ்சனம், இரவு, 7:30 மணிக்கு மீண்டும் வாகனங்களில் திருவீதி உலா நடக்கிறது.
ஏப்., 4ல், மாலை, 6:00 மணிக்கு நாமகிரி தாயார் திருமண மண்டபத்தில், சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. அதில், பக்தர்கள் சுவாமிக்கு மொய் சமர்ப்பித்து வழிபடுவது சிறப்பு.
ஏப்., 6ல், காலை, 9:00 மணிக்கு நரசிம்ம சுவாமி தேர் வடம் பிடித்தல், மாலை, 4:30 மணிக்கு, அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் திருத்தேர் வடம்
பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.