சேலம்: கூட்டுறவு வங்கியில் வேலை வாங்கி தருவதாக, 2 பேரிடம், 5 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, அ.தி.மு.க., பிரமுகர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சேலம், வீராணத்தை சேர்ந்தவர் குமார், 34. மாமாங்கம், தில்லை நகரை சேர்ந்தவர் காளிதாஸ், 35. இவர்கள், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனு:
சேலம், புதுரோடு கூட்டுறவு வங்கி தலைவராக இருந்த மாரியப்பன், 2017ல், 'கூட்டுறவு வங்கியில் வேலை உள்ளது. பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருகிறேன்' என கூறினார். அதை நம்பி, 5 லட்சம் ரூபாயுடன் அவரை சந்தித்தோம். அவர், சேலம், லீபஜார் கூட்டுறவு வங்கி தலைவர், அ.தி.மு.க.,வின், சேலம் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற நிர்வாகியான, அரியானுார் பழனிசாமியிடம் அழைத்துச்சென்றார்.
அவர், மாரியப்பன் மூலம் பணத்தை பெற்றுக்கொண்டார். ஆனால் அவர்கள் அளித்த வாக்குறுதிப்படி வேலை வாங்கி தரவில்லை. 2021ல் மாரியப்பன் இறந்த நிலையில், பழனிசாமியிடம் கேட்டபோது அவர் பணம் தர மறுத்து மிரட்டல் விடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரிக்க, சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டுள்ளார்.