ஓசூர்: கர்நாடகா மாநிலத்திலிருந்து வெளியேறிய ஐந்து யானைகள், ஓசூர் அருகே கிராமப்பகுதியில் முகாமிட்டதால், கிராம மக்கள்
அச்சமடைந்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஐந்து யானைகள், அம்மாநில எல்லையான ஆனைக்கல் பகுதியில் சுற்றித்திரிந்தன. பின் அங்கிருந்து வெளியேறி, தமிழக எல்லையான குமாரனப்பள்ளி, சூடுகொண்டப்பள்ளி கிராமங்களை ஒட்டி சுற்றித்திரிந்தன.
நேற்று அதிகாலை, சூதாளம் கிராமத்தையொட்டிய தனியாருக்கு சொந்தமான புங்கன்மர தோப்பில் தஞ்சமடைந்தன. இதனால், சூடகொண்டப்பள்ளி, சூதாளம், மஞ்சளகிரி, ஜோதிபுரம் சுற்றுவட்டார கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்க, ஓசூர் வனச்சரகர் ரவி மற்றும் வனத்துறையினர் அறிவுறுத்தினர். யானைகளால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில், இளைஞர்கள் பலர் யானைகளை பார்க்க திரண்டனர்.
யானைகளை பகல் நேரத்தில் விரட்டினால், உயிர் பலி போன்ற அசம்பாவிதம் நடக்கலாம் என்பதால், மாலை வரை விரட்டாமல் வனத்துறையினர் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். அதன் பின், பட்டாசு வெடித்து கர்நாடகா மாநிலத்திற்கு விரட்டும்
முயற்சியில் இறங்கினர்.