கிருஷ்ணகிரி: கட்டிகானப்பள்ளி பஞ்., தலைவரின், 'செக் பவர்' அதிகாரத்தை பறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி, அடுத்த கட்டிகானப்பள்ளி பஞ்., தலைவராக இருப்பவர் காயத்ரி கோவிந்தராஜ், 38; கிருஷ்ணகிரி நகரையொட்டி அமைந்துள்ள கட்டிகானப்பள்ளி பஞ்.,ல், 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய பஞ்சாயத்தான இங்கு, 35 கிராமங்களை சேர்ந்த, 19 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
கட்டிகானப்பள்ளி பஞ்., தலைவர், நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாகவும், டெண்டர் விட்டதில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், பதிவை புதுப்பிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர் விடப்பட்டதாகவும், மாவட்ட கலெக்டர் வரை புகார் சென்றது. இது குறித்து விசாரிக்க பி.டி.ஓ.,க்கள் அடங்கிய சிறப்பு விசாரணை அலுவலர் நியமிக்கப்பட்ட நிலையில், முறைகேடு உறுதிப்படுத்தப்
பட்டது.
இதையடுத்து, கட்டிக்கானப்பள்ளி பஞ்., தலைவர் காயத்ரி கோவிந்தராஜிடமிருந்து, 'செக் பவர்' அதிகாரத்தை ரத்து செய்து, மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டார். மேலும் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை, பி.டி.ஓ., மற்றும் துணை பி.டி.ஓ., (மண்டலம் 3) ஆகியோருக்கு வழங்கி, நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.