தர்மபுரி: நல்லம்பள்ளியிலுள்ள, அரசு உயர்நிலை பள்ளியில், பெண் ஆசிரியர்களே இல்லாததால், மாணவியர் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி, டொக்கு போதனஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட பூவலமடுவில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. ஊரிலிருந்து போதிய சாலை வசதியற்ற பகுதியிலுள்ள இப்பள்ளியில், ஆறு முதல், 10ம் வகுப்பு வரை, 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கடந்த, 11 ஆண்டுகளுக்கு முன், இப்பள்ளி துவக்கப்பட்டபோது, இங்கு பெண் ஆசிரியர்கள் பணியாற்றினர். போதிய சாலை வசதியற்ற அச்சத்தால், கடந்த இரண்டு ஆண்டுகளாக பெண் ஆசிரியர் ஒருவர் கூட தற்போது பணியில் இல்லை. ஒரு தலைமையாசிரியர் உட்பட, ஏழு ஆண் ஆசிரியர்கள் மட்டும் பணியாற்றி
வருகின்றனர்.
இடை நிற்கும் அபாயம்
இங்கு, 71 மாணவியர், 58 மாணவர்கள் படிக்கும் நிலையில், பெண் ஆசிரியர்கள் இல்லாததால், மாணவியர் தங்களின் அவசர இயற்கை உபாதை மற்றும் தங்களின் அவசர பிரச்னைகள் குறித்து தெரிவிக்க முடியாத நிலையில், சிரமப்படுகின்றனர். மாணவியர் படிக்கும் பள்ளிகளில், கட்டாயம் பெண் ஆசிரியர்கள் பணியில் இருக்க வேண்டும் என்ற நிலையில், மாணவர்களை விட, மாணவியர் அதிகம் படிக்கும் இப்பள்ளியில், கடந்த இரு ஆண்டுகளாக, பெண் ஆசிரியர்கள் இல்லாததால், மாணவியரின் பெற்றோர் அதிருப்தியில் உள்ளனர்.
இது குறித்து, கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றும், எந்த நடவடிக்கையும் இல்லை என குற்றச்சாட்டு உள்ளது. இதனால், இப்பள்ளி மாணவியர் இடை நிற்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க, இப்பள்ளிக்கு பெண் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்களிடம் கேட்டபோது, 'இங்கு படிக்கும் மாணவியரின் நலன் கருதி, வரும் மே மாதத்தில் நடக்கும் ஆசிரியர் கலந்தாய்வில், பெண் ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.