திருப்பூர்;'அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணியின் துவக்க விழாவை அவிநாசியில் நடத்த வேண்டும்' என, திட்ட போராட்டக் குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட மக்களின், 60 ஆண்டு எதிர்பார்ப்பான அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணி நிறைவு பெற்று, வெற்றிகரமாக வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த மூன்று மாவட்டங்களில் உள்ள, 1,045 குளம், குட்டைகளில் வெள்ளோட்ட அடிப்படையில் தண்ணீர் திறந்துவிடும் பணி நடந்து வருகிறது.
வெள்ளம் பாயும் பகுதிகளில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சட்டசபையில், மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, 'அடுத்த மாதம், இத்திட்டம் துவக்கப்படும்' என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். 'வரும், 14ம் தேதி, சித்திரை முதல் தேதியன்று, அத்திக்கடவு- அவிநாசி திட்டப்பணி துவக்கி வைப்பதற்கான வாய்ப்புள்ளது; நிகழ்ச்சியில், முதல்வர் பங்கேற்பார்' என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் துவக்க விழா நடத்த திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக்குழுவினர் கூறுகையில், 'கொங்கு மண்டல மக்களின், 60 ஆண்டு கால கனவு அத்திக்கடவு திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா, கடந்த, 2019, பிப்.,29ல் அப்போதைய முதல்வர் பழனிசாமி தலைமையில், அவிநாசியில் தான் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. தற்போது, திட்டப்பணி நிறைவு பெற்றுள்ள நிலையில், துவக்க விழாவையும் அவிநாசியில் தான் நடத்த வேண்டும்; அப்போது தான் திட்டத்தின் முக்கியத்துவம் உணரப்படும்' என்றனர்.