கோவை:'தினமலர்' நாளிதழில், நீண்ட காலமாகப் பணியாற்றி வந்த மேலாளர் முத்துவாப்பாவுக்கு பணி நிறைவு விழா நடந்தது.
திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லுாரைச் சேர்ந்தவர் முத்துவாப்பா. இவர், 'தினமலர்' நாளிதழின் திருநெல்வேலி பதிப்பில் பணியில் சேர்ந்து, திருச்சி, மதுரை ஆகிய பதிப்புகளில் பணியாற்றி, கோவை பதிப்பு துவங்கியதிலிருந்து பணியாற்றி வந்தார்.
முதுநிலை மேலாளராக பணியிலிருந்து ஓய்வு பெற்ற அவருக்கு கோவை, சுந்தராபுரம் 'தினமலர்' அலுவலகத்தில் பணி நிறைவு மற்றும் பிரிவு உபசார விழா நேற்று நடந்தது. 'தினமலர்' நாளிதழின் கோவை பதிப்பு வெளியீட்டாளர் இல.ஆதிமூலம் சார்பில், முத்துவாப்பாவுக்கு அவர் பணியினை பாராட்டி, பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
விழாவில் முத்துவாப்பா பேசுகையில், ''என்னுடைய பணித்திறன் பார்த்து, நிர்வாகம் பல்வேறு பிரிவுகளில் பணியாற்ற வாய்ப்பு வழங்கியது. நிர்வாகத்துக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பணி வாழ்வு, குடும்ப வாழ்வு வேறு என்று பிரித்துப் பார்த்து வாழ்ந்தால் ஆரோக்கியமாக வாழலாம்,'' என்றார்.
நிகழ்ச்சியில், கோவை பதிப்பின் செய்தி ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார்; தலைமை நிருபர் செல்வக்குமார் நன்றி கூறினார். மனிதவள மேம்பாட்டு பிரிவு மேலாளர் விஜயலட்சுமி, நிர்வாகப்பிரிவு உதவிப் பொதுமேலாளர் சுதர்சன், விற்பனைப் பிரிவு மேலாளர் அய்யப்பன், விளம்பரப்பிரிவு மண்டல துணை மேலாளர் வினோத்குமார் மற்றும் பல்வேறு துறை பொறுப்பாளர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.