கோவை:கோவையில் சந்தன மரக்கட்டைகளை கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 21 சந்தன மர துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை மேட்டுப்பாளையம் ரோடு காமராஜர் வீதியில், சாய்பாபா காலனி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மூன்று பேர் கையில் பையுடன் நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் அழைத்தனர். உடனே அவர்கள் கையில் வைத்திருந்த பையை துாக்கி எறிந்து ஓடினர்.
அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களை துரத்திச் சென்றனர். ஒருவரை மடக்கி பிடித்தனர். மற்ற இருவர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்டவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த மாரிமுத்து,32, என்பதும், வடவள்ளியில் இருந்து சந்தன மரங்களை வெட்டி துண்டுகளாக பையில் எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாரிமுத்தை கைது செய்து, விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய விஜய் மற்றும் சசிகுமாரை தேடி வருகின்றனர். அவர்கள் கொண்டு வந்த பையில் இருந்து, 21 சந்தன மர துண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.