கோவை;டிபாசிட்தாரர்களை ஏமாற்றிய, 'பைன் பியூச்சர்' மோசடி நிதி நிறுவன சொத்துக்கள், கோவையில் நேற்று, 5.22 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விடப்பட்டன.
கோவையை தலைமையிடமாக கொண்டு, 2007 முதல் 2012 வரை பைன் பியூச்சர் நிதி நிறுவனம் செயல்பட்டது. டிபாசிட் தொகைக்கு கூடுதலான வட்டி, ஊக்கத்தொகை வழங்குவதாக உறுதி கூறியதை நம்பி, தமிழகம், கேரளாவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பேர் முதலீடு செய்தனர்.ஆனால் உறுதி கூறியபடி அசல், வட்டி தராமல் ஏமாற்றுவதாக, 2012ல் புகார் எழுந்தது. கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, மோசடி செய்த பைன் பியூச்சர் நிறுவன சொத்துக்களை முடக்கினர்.
மொத்தம், 189 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக, 25 ஆயிரத்து 389 பேர் முன் வந்து போலீசில் புகார் அளித்தனர். வழக்கு விசாரணை, கோவை 'டான்பிட்' கோர்ட்டில் நடக்கிறது.பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கும் நோக்கத்துடன், மோசடி நிறுவன சொத்துக்களை ஏலம் விடும்படி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, நிறுவன இயக்குனர்கள், அவர்களது உறவினர்கள் பெயரில் இருந்த கட்டடங்கள், காலி மனை, நகை, வாகனங்கள் ஏலம் விடப்படுகின்றன. வாகனங்கள், நகை, வீட்டு மனை ஆகியவை ஏலம் முடிந்த நிலையில், நேற்று கட்டடங்கள் ஏலத்தில் விடப்பட்டன.
சவுரிபாளையம் ஸ்ரீராம் நகரில் இருக்கும் 3,000 சதுர அடி கொண்ட வீடு மற்றும் நிலம், சிங்காநல்லுாரில் 780 சதுர அடி வீடு, 3,576 சதுர அடி கொண்ட மற்றொரு வீடு மற்றும் நிலம் ஆகியவற்றின் ஏலம் நேற்று நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தலைமையில் நடந்த ஏலத்தில் 9 பேர் கலந்து கொண்டு ஏலம் கூறினர். மொத்தம் 5.22 கோடி ரூபாய்க்கு மூன்று கட்டடங்களும் ஏலத்தில் எடுக்கப்பட்டன.
இதில், 1.35 கோடி ரூபாய் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்ட கட்டடம், 1.84 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. 1.79 கோடி ரூபாய் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்ட கட்டடம், 3.38 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.