கோவை:அரசு பணியில் இருந்து இன்னும் இரு மாதத்தில் ஓய்வு பெற உள்ள, டி.ஆர்.ஓ., அந்தஸ்திலான அதிகாரி ஒருவரை, கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் எடுக்கும் பிரிவுக்கு தமிழக அரசு நியமித்துள்ளது.
கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய, 627.89 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. இதில், தனியாரிடம் இருந்து கையகப்படுத்த வேண்டிய, 461.90 ஏக்கர் பட்டா நிலங்களில், 395 ஏக்கருக்கு இழப்பீடு வழங்கப்பட்டு விட்டது. இன்னும், 66.9 ஏக்கர் நிலம் மட்டும் கையகப்படுத்த வேண்டியுள்ளது.
இதுதவிர, அரசுக்கு சொந்தமான, 28 ஏக்கர் புறம்போக்கு நிலம், பாதுகாப்பு துறைக்குச் சொந்தமான, 135 ஏக்கர் நிலத்தை வகை மாற்றம் செய்ய வேண்டும். பாதுகாப்பு துறைக்குச் சொந்தமான நிலத்தில், விமான நிலைய விரிவாக்கப் பணிகள் செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டு விட்டது.
நிலம் எடுப்பு பிரிவு டி.ஆர்.ஓ., பணியிடம், கடந்தாண்டு நவ., முதல் ஐந்து மாதங்களாக காலியாக இருப்பது, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
உடனே, சென்னையில் அரசு கேபிள் 'டிவி' நிறுவன பொது மேலாளராக பணிபுரியும் ரவி, விமான நிலைய விரிவாக்கம் நிலம் எடுப்புக்கு டி.ஆர்.ஓ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், மே மாதம் ஓய்வு பெற இருக்கிறார். அதனால், நிலம் எடுப்பு மீண்டும் தொய்வடைய வாய்ப்பிருப்பதால், அப்பிரிவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஏனெனில், இன்னும் கையகப்படுத்த வேண்டிய, 66.9 ஏக்கர் நிலங்கள் மிகவும் சிக்கலானவை. நில உரிமையில் வாரிசு பிரச்னை; பத்திரம் இல்லாதவர்கள்; ஒரு நிலத்துக்கு இருவர் உரிமை கோருவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன. இவற்றின் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி, தீர்வு காண வேண்டும்.
நிலம் எடுப்பு பணி முழுமையாக முடியும் வரை, சிரத்தை எடுத்து பணியாற்றக்கூடிய அதிகாரியை நியமிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
விமான நிலைய விரிவாக்கம் நிலம் எடுப்பு டி.ஆர்.ஓ., (கூடுதல் பொறுப்பு) செல்வசுரபி கூறுகையில், ''இதுவரை, 395 ஏக்கர் நிலம் கையகப்படுத்த இழப்பீடு வழங்கி விட்டோம். இன்னும், 66.9 ஏக்கரே நிலுவை இருக்கிறது. இதுவரை கையகப்படுத்தியுள்ள நிலங்களை ஒப்படைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். தமிழக அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை வகை மாற்றம் செய்யும் பணி ஒரு மாதத்தில் முடிந்து விடும்,'' என்றார்.