கூடலுார்:முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு பிரதமர் வர உள்ளதாக வந்த தகவலை அடுத்து பராமரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டம், முதுமலை முதுமலை தெப்பக்காட்டில், குட்டியானைகளும் அதன் வளர்த்த பாகங்களுக்கும் இடையேயான பாசப்பினைப்பை மையமாக வைத்து, ஊட்டியை சேர்ந்த கார்த்திகி கன்சால்வஸ் என்ற பெண் இயக்குனர் எடுத்த, 'எலிபென்ட் விஸ்பரரர்ஸ்' என்ற ஆவண படத்துக்கு, சிறந்த ஆவண படத்திற்கான 'ஆஸ்கார்' விருது கிடைத்தது.
அதில், நடித்த யானை பாகன் பொம்மன் அவர் மனைவி பெல்லியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இதனால், முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம், உலகம் முழுவதும் புகழ்பெற்றுள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் குண்டல்பெட் பகுதிக்கு தேர்தல் பிரசாரத்துக்கு ஏப்., முதல் வாரத்தில் வரும் பிரதமர் மோடி, முதுமலை தெப்பக்காடு பகுதிக்கு வந்து வளர்ப்பு யானைகள் முகாமை பார்வையிட்டு, பொம்மன், பெல்லியை சந்திக்க உள்ளாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அவர் வரும் தேதி குறித்து அரசு தரப்பில் இன்னும் அதிகார பூர்வமான தகவல் வெளியாகவில்லை.
இந்நிலையில், நீலகிரி கலெக்டர் அம்ரீத் தெப்பக்காடு முகாமில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, முகாம் செல்லும் வனத்துறை சாலை சீரமைப்பு, குட்டி யானைகள் பராமரிக்கப்படும் கரால் பகுதிக்கு பாதை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு சீரமைப்பு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.
வனத்துறையினர் கூறுகையில்,'இங்கு எடுக்கப்பட்ட ஆவண படத்துக்கு 'ஆஸ்கார்' விருது கிடைத்தது தொடர்ந்து, உயர் அதிகாரிகள் வந்து சொல்வதுடன், மத்திய, மாநில அரசுகளின் வி.ஐ.பி.,கள் வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. அதை கருத்தில் கொண்டு பராமரிப்பு பணிகள் மேற்கொண்டுள்ளோம்' என்றனர்.