திருப்பூர்:திருப்பூர் அருகே அனுமதியின்றி செயல்படும் ஜெபக்கூடத்துக்கு முறைகேடாக வழங்கப்பட்ட வீட்டு வரியை அதிகாரிகள் ரத்து செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், மங்கலம் அருகே பூமலுார் ஊராட்சிக்கு உட்பட்ட வி.ஜி.பி., மங்களாபுரி டவுன் குடியிருப்பு பகுதியில் சிலர், வீட்டுமனைகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில், சட்டவிரோதமாக ஜெபக் கூடம் நடத்தினர்.
அங்கு, பேய் ஓட்டுவதாகவும், வெளியில் இருந்து நபர்களை அழைத்து வந்து ஒலிபெருக்கி வாயிலாக திடீரென கூச்சல் போட்டு, அச்சுறுத்துவதாகவும், மக்கள் புகார் கூறி வந்தனர்.
அதேநேரம், ஊராட்சி சட்ட விதிகளுக்கு புறம்பான முறையில் ஜெப வீடு என்று வீட்டு வரி ரசீது வழங்கியுள்ளனர். ஆனால், மின் வாரியம் மின் இணைப்பு தனி நபர் பெயரில் உள்ளது.
இந்த சட்டவிரோத ஜெபக்கூடத்தை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதியினர் மங்கலம் போலீஸ், பல்லடம் தாலுகா அலுவலகத்தில் புகார் அளித்தனர். பல்லடம் வருவாய்த்துறையினர் விசாரித்தனர்.
இதனால், ஜெபக்கூடத்துக்கு விதிக்கப்பட்ட வீட்டு வரியை, பூமலுார் ஊராட்சி நிர்வாகம் ரத்து செய்தது.
கடந்த சில நாட்களாக, ஜெபக்கூடம் திறக்கப்படாமல் பூட்டப்பட்டு உள்ளது. மங்கலம் போலீசார் தொடர்ந்து கண்காணிக்கின்றனர்.