கிணத்துக்கடவு:கோவை மாவட்டம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில் உள்ள கல் குவாரிகளில் அத்துமீறி கனிம வளம் தோண்டப்பட்டு, சட்ட விரோதமாக கேரளாவுக்கு கடத்துவது தொடர்கிறது. இதில், ஆளுங்கட்சி, அதிகாரிகள் 'பலன்' பெறுவதால், மக்கள் யாராவது புகார் தெரிவித்தாலும், மிரட்டப்படுகின்றனர்.
கேரள மாநிலத்தில், கனிம வள கற்கள் மற்றும் ஆற்று மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், கேரள எல்லையில் உள்ள, தமிழக பகுதிகளான, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகளிலிருந்து, கிராவல் மண், எம்.சாண்ட், கற்கள் கேரளாவுக்கு டிப்பர் லாரிகளில் கொண்டு செல்லப்படுகின்றன.
இதனால், இங்குள்ள குவாரிகளில், அளவுக்கு அதிகமாக வெடி வைத்து, அரசு நிர்ணயம் செய்த அளவை விட கூடுதலாக கனிமவளங்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன. நிர்ணயித்த நேரத்தை கடந்து, இரவிலும் வெடி வைத்து பாறை உடைக்கின்றனர்.
லாரிகளில் அரசு நிர்ணயித்த 'பர்மிட்' அளவை விட கூடுதலாக எடுத்து செல்கின்றனர். ஒரே பர்மிட்டை வைத்து பல முறை கனிம வளத்தை இங்கிருந்து கடத்திச் செல்கின்றனர்.
கேரளாவுக்கு, தினமும், 500க்கும் மேற்பட்ட லாரிகளில் கனிமவளங்கள் சட்ட விரோதமாக எடுத்து செல்லப்படுகின்றன. 'பர்மிட்' வழங்குவதிலும் முறைகேடு நடப்பதால், தமிழக அரசுக்கு மாதத்துக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
கேரளாவுக்கு கனிமவளம் கொண்டு செல்லும் லாரிகளில், தி.மு.க., மேலிட உத்தரவின் பேரில், ஒரு யூனிட்டுக்கு 400 ரூபாய் வீதம் வசூலிக்கின்றனர். இதற்காக, ஒவ்வொரு குவாரியிலும், ஆளுங்கட்சி சார்பில் ஒரு நபர் பணியமர்த்தப்பட்டு உள்ளார்.
அவர்கள் தரும் ரசீது மற்றும் குவாரியில் வழங்கும் 'பர்மிட்' இரண்டும் இருந்தால் தான், 'செக்போஸ்ட்'டை கடந்து செல்ல முடியும்.
போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் யாரும் அத்துமீறலை கண்டுகொள்வதில்லை. அதிகாரிகள் சிலர் இதைப் பயன்படுத்தி, 'கவனிப்பு' பெறுகின்றனர்.
தனியார் தொலைக்காட்சி நிருபர்கள் இருவர், செய்திகளை சேகரிக்க நேற்று முன்தினம் கிணத்துக்கடவு, நெ.10 முத்துார் பகுதியில் உள்ள தனியார் குவாரிக்கு சென்றனர். அப்போது குவாரியில் இருந்தவர்கள் நிருபர்களை தாக்கி, மிரட்டல் விடுத்தனர்.
இதற்கு ஆளும் தி.மு.க.,வைச் சேர்ந்த சிலர் ஆதரவு தெரிவிப்பதால் போலீசார், துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர்.
இவ்வளவு பிரச்னை, மக்கள் போராட்டங்கள், பா.ஜ., போராட்டம் நடத்தியும், அரசு கொஞ்சம் கூட அசைந்து கொடுக்காமல் உள்ளது. மக்களையும், இயற்கை வளத்தையும் பாதுகாக்க இனியாவது அரசு இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கிடையே, கிணத்துக்கடவு அருகே, கல்குவாரியை 'வீடியோ' எடுத்த தனியார் தொலைக்காட்சி நிருபர்களை தாக்கிய மூன்று பேர் மீது போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.