மதுரை: உணவகங்கள், ரோட்டோர கடைகளில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவு, தரமற்ற குடிநீரால் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை பரவுவது மதுரையில் அதிகரித்துள்ளது.
மதுரை அரசு மருத்துவமனையில் தினமும் 10 குழந்தைகள் மஞ்சள்காமாலை பாதிப்பால் புறநோயாளியாக சிகிச்சை பெறுகின்றனர். இரு குழந்தைகள் வார்டில் அனுமதிக்கப்படுகின்றனர்.
தனியார் மருத்துவமனைகளில் மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை 500 ஐ தாண்டுகிறது. குடிநீர் சுகாதாரமற்று இருந்தால் அதன் மூலம் மஞ்சள்காமாலை பரவும் அபாயம் உள்ளது.உணவகங்கள், ரோட்டோர கடைகளில் கைகளை சுத்தம் செய்யாமல் உணவு சமைப்பதும், தரமற்ற குடிநீர் வழங்குவதும் மஞ்சள்காமாலை பரவ முக்கிய காரணம் என்கிறார் மதுரை அரசு மருத்துமவனை குழந்தைகள் நலத்துறை தலைவர் பாலசங்கர். அவர் கூறியதாவது:
தற்போது மஞ்சள் காமாலை, சின்னம்மை பரவும் வேகம் அதிகரித்துஉள்ளது. சின்னம்மைக்கு தனிமைப்படுத்துவதே மருந்து.
மஞ்சள்காமாலை வந்தால் முதல் மூன்று நாட்கள் மிதமான காய்ச்சல் இருக்கும். வயிற்று வலி, பசியின்மை, வாந்தி ஏற்படும். சிறுநீர் பரிசோதனையில் மஞ்சள்காமாலையை கண்டறியலாம்.
நோய் வந்தால் எண்ணெய், கார உணவுகளை மட்டும் தவிர்க்க வேண்டும். கடுமையான அசதி ஏற்படும் என்பதால் ஓய்வு அவசியம். ஒன்று முதல் 2 வாரங்களில் சரியாகி விடும். குழந்தைகளுக்கு வருவதை தடுக்க, வீட்டில் சமைத்த உணவை கொடுக்க வேண்டும்.
தண்ணீரை கொதிக்க வைத்து ஆறவைத்து பருக வேண்டும், என்றார். உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ஜெயராம பாண்டியனிடம் கேட்டபோது, ''உணவகங்கள், பேக்கரி, ரோட்டோர கடைகளில் உணவு மாதிரி எடுத்து ஆய்வு செய்து வருகிறோம். எல்லா உணவகங்களிலும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் அல்லது கொதிக்க வைத்து ஆறவைத்த குடிநீரையே வழங்க வேண்டும். உணவோ, குடிநீரோ தரமற்று இருந்தால் உடனடியாக 94440 42322 வாட்ஸ்ஆப் எண்ணுக்கு புகார் அளிக்கலாம்'' என்றார்.