எருமப்பட்டி: எருமப்பட்டி அருகே, பொட்டி ரெட்டிபட்டி பஞ்., நுாலகத்தில் பொது மக்கள், மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
எருமப்பட்டி யூனியன், பொட்டிரெட்டிபட்டி பஞ்.,ல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் சார்பில், நுாலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுக்கும் மேலாக பயன்படுத்தாமல் பூட்டி கிடந்த நுாலக கட்டடத்தை, தற்போதைய அரசு மீண்டும் புதுப்பித்து பொதுமக்கள், மாணவர்கள் பயன்பெறும் வகையில், அடிப்படை வசதிகள் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில், நுாலகத்திற்கு தினமும் ஏராளமானோர் வந்து, புத்தகங்கள் படித்து வரும் நிலையில், மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் போதுமான அளவு புத்தகங்கள் இல்லை என்று புகார் வந்துள்ளது.
இது குறித்து புத்தக வாசிப்பாளர்கள் கூறியதாவது:
கடந்த ஓராண்டுக்கு முன்பு, பூட்டிக்கிடந்த நுாலகத்தை பல லட்சம் செலவில் புதுப்பித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், மாணவர்கள், பொது மக்கள் படிப்பதற்காக தேவையான புத்தகங்கள் குறைவாக உள்ளது. எனவே கூடுதலாக புத்தகங்கள் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.