பெருமாள் கோவில்களில்
ராமநவமி சிறப்பு வழிபாடு
குமாரபாளையம் பெருமாள் கோவில்களில், சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
ராமநவமியை முன்னிட்டு குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தரராஜ பெருமாள் கோவில், குமாரபாளையம் அக்ரஹாரம் லட்சுமி நாராயண சுவாமி கோவில், விட்டலபுரி பாண்டுரங்கர் கோவில், ராமர் கோவில், ஜெய்ஹிந்த் நகர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத புருஷோத்தம பெருமாள் கோவில், கோட்டைமேடு ஸ்ரீதேவி, பூதேவி சமேத தாமோதரசுவாமி கோவில், கள்ளிப்பாளையம் பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்
பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டம்
அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், பணி பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில், பள்ளி ஆசிரியர் பணி பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு விரைந்து நிறைவேற்றிட வலியுறுத்தி, ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆசிரியர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும், பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற கோரியும் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார்.
மாநில பொருளாளர் முருக செல்வராசன் சிறப்பாளராக பங்கேற்றார். 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்று, அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
வீடுகளுக்கு பட்டா கேட்டு முதல்வருக்கு மனு
எருமப்பட்டி யூனியன், சிவநாய்க்கன்பட்டி பஞ்.,ல், 15 ஆண்டுக்கு மேலாக குடியிருக்கும் மக்களுக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என, முதல்வர் தனி பிரிவுக்கு பஞ்சாயத்து தலைவர் தேவிகா கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது.
சேந்தமங்கலம் வட்டம், சிவநாய்க்கன்பட்டி பஞ்.,ல், 26ம் தேதி நடந்த குடியரசு தினவிழா கிராம சபை கூட்டத்தில், வறுமைகோட்டுக்கு கீழ் வசிக்கும், 18 பேருக்கு கூரை வீட்டை மாற்றி கான்கிரீட் வீடு கட்ட பிரதமர் வீடு வழங்கும் திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் படி பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 18 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வரும் கூரை வீடுகளுக்கு வீட்டு வரி, மின் கட்டனம், குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
ஆனால், இந்த இடத்திற்கு வருவாய் துறையினர் பட்டா வழங்காமல், பல ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்
பட்டுள்ளது.
சாய் தபோவனத்தில் ராமநவமி,
ஷீரடி சாய்பாபா பிறந்த நாள் விழா
நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள தொட்டிப்பட்டி, சாய் தபோவனத்தில், ஷீரடி சாய்பாபா பிறந்தநாள், ராமநவமி மற்றும் பங்குனி மூன்றாவது வியாழனை முன்னிட்டு, ஷீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு அங்காரம், ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது.
நேற்று காலை சாய்பாபாவிற்கு, பல்வேறு விதமான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, காக்கட் என்னும் ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் கொண்டு வரப்பட்ட மலர்களால், கோவில் வளாகம், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பாபாவின் பஜனை நிகழ்ச்சி நடந்தது. மாலை சிறப்பு ஆரத்தி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மகாவீர் ஜெயந்தியன்று
டாஸ்மாக் கடை மூடல்
மகாவீர் ஜெயந்தியன்று, டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்
நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள அறிக்கை: ஏப்.,4ல், மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, அன்றைய தினம் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் எப்.எல்.,1/எப்.எல்.,2/எப்.எல்.,3 எப்.எல்.,3ஏ, எப்.எல்.,3ஏஏ., எப்.எல்.,11 வரையிலான உரிம வளாகங்களை மூட வேண்டும் என, அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நாளில் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்., 3 உரிம வளாகங்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ, சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விவசாய தொழிலாளர் சங்க கூட்டம்
எலச்சிபாளையத்தில், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட அமைப்பு குழு கூட்டம் நடந்தது.
நிர்வாகி ஆறுமுகம் தலைமை வகித்தார். இதில், 100 நாள் வேலை திட்டத்தை, 200 நாளாக உயர்த்த வேண்டும். இதில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தினமும், 600 ரூபாய் சம்பளம் உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்., 11ல், பருத்திப்பள்ளி பஞ்சாயத்து அலுவலகம் முன், கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயலாளர் ஜெயராமன், அமைப்புக்குழு உறுப்பினர்கள் பாண்டியன், மணிகண்டன், சாமிநாதன், வரதராஜு, மந்திரி, சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.