ராசிபுரம்: ராசிபுரம் அருகே, ஆப்பிரிக்கா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பன்றிகளை, கொன்று புதைத்ததுடன் பண்ணைக்கும் அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த வெண்ணந்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்லாங்குளம் ஆந்திராகாடு பகுதியை சேர்ந்தவர் ராஜா, 65. இவர் இந்த பகுதியில், 10 ஆண்டுக்கு மேலாக பன்றி பண்ணை நடத்தி வருகிறார்.
சில வாரங்களுக்கு முன், பண்ணைக்கு அருகே பன்றி ஒன்று இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து பண்ணையில் இருந்த பன்றிகள், ஒன்றன் பின் ஒன்றாக இறக்கத் தொடங்கின.
இறந்த பன்றியின் ரத்த மாதிரியை, போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான தேசிய நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக ராஜா அனுப்பி வைத்தார்.
இதில், இறந்த பன்றிகளுக்கு ஆப்பிரிக்கா காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தகவலறிந்த சுகாதாரம் மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகள், பண்ணையை ஆய்வு செய்து யாரும் பயன்படுத்தக்கூடாது என, கட்டுப்பாடுகளை விதித்து சென்றனர்.
நாமக்கல் கலெக்டர்
உத்தரவின்படி நேற்று, 12 பேர் கொண்ட கால்நடை மருத்துவக் குழுவினர், பாதுகாப்பு உடையுடன் பண்ணைக்கு சென்று அங்கிருந்த, 18 பன்றிகளை கொன்று புதைத்தனர். மேலும் பண்ணைக்கு, 'சீல்' வைத்ததுடன் எச்சரிக்கை பலகையையும் வைத்து சென்றனர்.
இது குறித்து கால்நடை மற்றும் பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் பாஸ்கர் கூறியதாவது:
இந்த பண்ணையில் இருந்த பன்றிகளுக்கு, ஆப்பிரிக்கா காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி இருந்தோம். கலெக்டர் உத்தரவின்படி, பண்ணையில் இருந்த, 18 பன்றிகளை பாதுகாப்புடன் கொன்று அப்புறப்படுத்தியுள்ளோம். அதுமட்டுமின்றி பண்ணைக்கு, 'சீல்' வைத்ததுடன், யாரும் ஓராண்டுக்கு உள்ளே வராமல் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் ஏற்பாடு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.