பள்ளிப்பாளையம்:''பள்ளிப்பாளையம் நகராட்சி தலைவர் ஆதரவாளர்கள், வீடு புகுந்து என் கணவரை தாக்கினர்,'' என, தி.மு.க., பெண் கவுன்சிலர் சாந்தி கூறினார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் நகராட்சி 16வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சாந்தி, 45. இவரது கணவர் சண்முகம். இந்த தம்பதியின் மகன் தங்கமணி, 30, தி.மு.க., இளைஞரணியில் உள்ளார்.
சாந்தியின் கணவர் ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். அவரிடம் சண்முகராஜா என்பவர் சீட்டு போட்டுள்ளார். அவர், பள்ளிப்பாளையம் நகராட்சி தலைவர் செல்வராஜிடம் வேலை செய்கிறார்.
சீட்டுப்பணம் குறித்து சண்முகம் மற்றும் சண்முகராஜா ஆகியோரிடையே பிரச்னை இருந்தது. இதுதொடர்பாக, இருவருமே போலீசில் புகார் செய்துள்ளனர்.
பள்ளிப்பாளையம் நகராட்சிக் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.நகராட்சி அலுவலகத்துக்கு வந்த கவுன்சிலர்சாந்தி, கூட்டத்தை புறக்கணித்தார்.
இதுகுறித்து சாந்தி கூறியதாவது: நகராட்சித் தலைவர் செல்வராஜ் ஆதரவாளர்கள் 30 பேர், என் வீட்டுக்குள் புகுந்து என் கணவரை தாக்கினர்.
போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், நகராட்சி கூட்டத்தை புறக்கணித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து நகராட்சித் தலைவர் செல்வராஜ்,''இந்த சம்பவத்துக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
''கவுன்சிலர் சாந்தியின் கணவர் சண்முகம், அவரது மகன் தங்கமணி ஆகிய இருவரும்தான் என் அலுவலகத்துக்கு இரவில் வந்து, என்னிடம் வேலை செய்யும் பணியாளரை தாக்கியுள்ளனர். அதற்கான 'வீடியோ' ஆதாரம் உள்ளது,'' என்றார்.