திருவள்ளூர்:திருவள்ளூர் பெரியகுப்பம் - மணவாள நகர் ரயில்வே மேம்பாலத்தின்கீழ்ப் பகுதியில், ஏராளமான நரிக்குறவர்கள் தங்கி உள்ளனர். அருகில், சினிமா தியேட்டர், 'டாஸ்மாக்' கடை உள்ளிட்ட கடைகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளன.
நேற்று முன்தினம் இரவு, பாலத்தின் கீழ் திடீரென, நாட்டு வெடிகுண்டு வெடிப்பது போல், பலத்த சத்தம் கேட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் அலறியடித்து ஓடினர்.
தகவல் அறிந்ததும், திருவள்ளூர் டவுன் போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.
இதில், நரிக்குறவர்கள் பாலத்தின் கீழ் 'டெண்ட்' அமைத்து, பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
அவர்கள் வைத்திருந்த, குருவி சுடும் நாட்டு துப்பாக்கி வெடித்ததா அல்லது வேறு நாட்டு வெடிகுண்டு உள்ளதா என, விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அங்கு வசித்து வருமுன், சூர்யா, 25, என்பவர், இரவு நேரத்தில் விலங்குகளை விரட்டுவதற்காக இரண்டு நாட்டு பட்டாசுகளை வைத்திருந்தார்.
அதன் மீது, பீடி பிடித்துக் கொண்டிருந்த அவர் பீடித் துண்டை துாக்கி வீசியெறிந்த போது, பட்டாசு வைத்திருந்த துணி கட்டில் பட்டதில் தீப்பற்றி வெடித்துள்ளதாக தெரிய வந்தது.
இதையடுத்து, போலீசார் அவர்களை எச்சரித்து, அனுப்பியுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.