சென்னை:கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தை, 20 கோடி ரூபாயில் நவீனமயமாக்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுஉள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் நெரிசல் குறைப்பு நடவடிக்கையாக, கோயம்பேடில் 80 ஏக்கர் நிலத்தில் காய், கனி, பூ மொத்த விற்பனை அங்காடி வளாகம், கடந்த 1996ம் ஆண்டு அமைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்த வளாகத்தில் ஏற்பட்டுள்ள நெரிசல், பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
இதனால், அங்காடி வளாகத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் அறிவித்தாலும், சி.எம்.டி.ஏ.,வில் இருந்து வந்து இங்கு ஆதிக்கம் செலுத்தும் கட்டுமான பிரிவு அதிகாரிகளால், திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுவதில்லை.
இதனால், தினசரி திடக்கழிவுகள் அகற்றுவதில் துவங்கி ஆக்கிரமிப்புகள், கடைகள் பயன்பாட்டில் விதிமீறல் என, கோயம்பேடு சந்தை, குளறுபடி மையமாக மாறியுள்ளது.
தற்போதைய சூழலுக்கு ஏற்ப, கோயம்பேடு சந்தையை நவீனமயமாக்க வேண்டுமென, தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி, இந்த அங்காடி வளாகத்தை, 20 கோடி ரூபாயில் நவீனமயமாக்கும் திட்டம், 2021 - 22ம் நிதியாண்டில் அறிவிக்கப்பட்டது.
இதை செயல்படுத்தவும், நெரிசல் குறைப்பு பணிகளுக்கான பரிந்துரைகள் வழங்கவும், கலந்தாலோசகர் நியமிக்கப்படுவார் என, தமிழக அரசு 2022 - 23ல் அறிவித்தது.
ஆனால், கள நிலையில் இதற்கான எந்த பணிகளும் நடந்ததாக தெரிய வில்லை என, புகார் எழுந்துள்ளது.
இது குறித்து கோயம்பேடு அங்காடி வியாபாரிகள் கூறியதாவது:
தமிழக அரசு அறிவித்தபடி, இதற்கு கலந்தாலோசகர் நியமிக்கப்பட்டார். அவர் அளித்த பரிந்துரைகள் அடிப்படையில், அடுத்தகட்ட பணிகளை அங்காடி நிர்வாகக் குழு எடுக்க வேண்டும்.
இதற்கு, பழைய கடைகளை இடித்து, அந்த நிலத்தின் உரிமை, அதிகார அமைப்பிடம் இருக்க வேண்டும். கோயம்பேடு வளாகத்தில் கடைகள் ஏலம் வாயிலாக ஒதுக்கப்பட்டு, வியாபாரிகளுக்கு விற்பனை பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, விற்பனை பத்திரம் வைத்திருப்பவர்களிடம் இருந்து கடைகளை, அங்காடி நிர்வாகக் குழு பெற்றால் மட்டுமே, நவீனமயமாக்கலுக்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள முடியும்.
இதில், வியாபாரிகளிடம் ஒருமித்த கருத்தை உருவாக்கி, கடைகள் மற்றும் நிலத்தின் உரிமையை எப்படி பெறுவது என்பதில், அங்காடி நிர்வாகக் குழுவுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அங்காடி திட்டத்துக்காக சி.எம்.டி.ஏ., கையகப்படுத்திய நிலம் தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அதிகாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு இதில் தலையிட்டால் தான், சுமுக தீர்வு ஏற்படும்; நவீனமயமாக்கல் பணிகளை மேற்கொள்ள முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.