சென்னை:சென்னை பெருநகர் பகுதியில், 200 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை தொகுப்பு திட்ட பணிகளுக்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னையில் இரண்டாவது முழுமை திட்டப்படி, வலை பின்னல் முறையில் சாலை தொகுப்பு திட்டங்களை செயல்படுத்த, சி.எம்.டி.ஏ., முடிவு செய்தது.
கலந்தாலோசகர், கல்வி நிறுவனங்கள் வாயிலாக, இதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், 10 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.
இந்த இடங்களில், 200 கோடி ரூபாய் மதிப்பில் புதிய சாலைகள் அமைத்து, உள்ளூர் சாலைகளை இணைக்க திட்டமிடப்பட்டது.
இத்திட்டத்துக்கு, முதல் நிலை ஒப்புதல் அளித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சர்தார் படேல் சாலை
சென்னையில் சர்தார் படேல் சாலை, எல்.பி., சாலை, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை, ஹன்டர்ஸ் சாலை, எத்திராஜ் சாலை, கிரீம்ஸ் சாலை, பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை, நியூ ஆவடி சாலை, வில்லேஜ் சாலை, டேங்க் பன்ட் சாலை ஆகியவற்றை விரிவாக்கம் செய்ய, சி.எம்.டி.ஏ., திட்டமிட்டது.
இதற்கான கள ஆய்வு அடிப்படையில் திரட்டப்பட்ட தகவல்கள், வளர்ச்சி உரிமை மாற்ற அடிப்படையில் நிலம் பெறும் வழிமுறை ஆகிய விபரங்கள், அரசுக்கு அனுப்பப்பட்டன. இதன் அடிப்படையில், சென்னை கிண்டி - அடையாறு இடையிலான சர்தார் படேல் சாலை விரிவாக்க திட்டத்துக்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
நிலம் பெறுவது தொடர்பான விபரங்களை, சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த இரண்டு திட்டங்களுக்கான அரசாணைகளை வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் அபூர்வா பிறப்பித்துள்ளார்.