செங்குன்றம்:செங்குன்றம் ஜி.என்.டி., சாலை, முர்த்துஜா உசேன் தெரு சந்திப்பில், மழை நீர் வடிகாலுக்காக 8 அடி அகலம், 7 அடி ஆழத்தில், நேற்று முன்தினம் இரவு 11:00 மணி அளவில் பள்ளம் தோண்டினர்.
அப்போது, அங்கிருந்த உயர் மின் அழுத்த இணைப்பு, நாரவாரிக்குப்பம் பேரூராட்சியின் குடிநீர் குழாய் இணைப்பு, பொது தொலைபேசி இணைப்பு மற்றும் இணையதள இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
இதனால், காய்கறி பஜார் மற்றும் வண்டிமேடு பகுதியில் உள்ள, 500க்கும் மேற்பட்ட வீடு, கடை, மருத்துவமனைகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தகவல் அறிந்த செங்குன்றம் மின் வாரிய அதிகாரிகள், நேற்று அதிகாலை 5:00 மணி முதல், மின் இணைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால், 17 மணி நேரம் மின் வசதியின்றி பொதுமக்கள் அவதிப்பட்டனர். அதன் பிறகே மின் வினியோகம் சீரானது.
அடாவடி
நெடுஞ்சாலைத்துறை, மழை நீர் வடிகால் அமைக்கும் பணியை, மின் வாரியம், பேரூராட்சி நிர்வாகம், பொது தொலைபேசி நிர்வாகம் ஆகியவற்றுடன், முறையாக கலந்தாலோசித்து செய்ய வேண்டும். ஆனால், அடாவடியாக செயல்படும் அத்துறையால், செங்குன்றம் ஜி.என்.டி., சாலையில் உள்ள, 120க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள், 12 மின் மாற்றிகள் உறுதியிழந்து, ஆபத்தான நிலையில் உள்ளன.
நெடுஞ்சாலைத்துறையினர், அவற்றை தற்காலிகமாக சமாளிக்க, மின் வாரியத்தின் பாதுகாப்பு அனுமதி இரும்பு குழாய் மற்றும் மரச்சட்டங்களை வைத்து, 'முட்டு' கொடுத்துள்ளனர்.
அவை எதிர்பாராமல் சரிந்தால், அங்குள்ள மின் கம்பங்கள், மின் மாற்றிகள் சாலையில் விழுந்து, பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படும் 'அபாயம்' உள்ளது.
கடந்த, 27ம் தேதி மாலை, செங்குன்றம் காவல் நிலையம் அருகே, மேற்கண்ட பிரச்னையால், தாழ்வாக தொங்கிய மின் கம்பி, தனியார் பேருந்தின் மீது விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த செங்குன்றம் மின் வாரியத்தினர், உடனடியாக செயல்பட்டு ஆபத்தான மின் இணைப்புகளை துண்டித்து, பெரும் விபத்தை தவிர்த்தனர்.