சென்னை:சென்னை பெருநகரில், வெள்ள நிலவரம் குறித்து நிகழ் நிலை முன்னறிவிப்பு வசதிகளை ஏற்படுத்தும் திட்டத்துக்கு, கூடுதலாக தேவைப்படும், 6.96 கோடி ரூபாயை பெற, அரசு அனுமதிக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், சமீபகாலமாக வெள்ள பாதிப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது.
கால நிலை மாற்றம் காரணமாக, திடீரென குறைந்த நேரத்தில் அதிக மழை பெய்வதால், பல இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது.
நீர் வழித்தடங்கள், வடிகால் அமைப்புகளின் கொள்ளளவைவிட, அதிக நீர் வருவது குறித்து, தாழ்வான பகுதிகளில் வசிப்போருக்கு உடனுக்குடன் எச்சரிக்கை அளிப்பது அவசியமாகிறது.
இதற்காக, அடையாறு, கூவம், பகிங்ஹாம் கால்வாய் போன்ற நீர் வழித்தடங்களில் வெள்ள நிலவரம் குறித்து, 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு கண்காணித்து, வெள்ள நிலவரம் குறித்து 'ரியல் டைம்' எனப்படும் நிகழ்நிலை தகவல்களை அரசு நிர்வாகத்துக்கும், பொதுமக்களுக்கும் அளிக்க புதிய திட்டம் உருவாக்கப்பட்டது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, மாநகராட்சி, பொதுப்பணி, நீர்வளம் உள்ளிட்ட பல துறைகள் இணைந்து, சென்னை ஐ.ஐ.டி., பங்கேற்புடன், இதற்கான புதிய திட்டத்தை உருவாக்கியது.
இது குறித்து, வருவாய்த் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
வெள்ள நிலவரம் குறித்த நிகழ்நிலை தகவல் அறிவிப்பு திட்டத்துக்கு, 71.21 கோடி ரூபாயை அனுமதித்து, தமிழக அரசு உத்தரவிட்டது.
இதைப் பயன்படுத்தி, 86 இடங்களில் தானியங்கி மழைமாணிகள், 14 இடங்களில் தானியங்கி வானிலை நிலையங்கள், 185 இடங்களில், தானியங்கி தண்ணீர் நிலவர தகவல் பதிவு நிலையங்கள், 58 இடங்களில் வெள்ள அளவு அறியும் 'சென்சார்' மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த தானியங்கி மையங்களில் பதிவாகும் தகவல்களை, ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு கொண்டு செல்வது, ஒருங்கிணைப்பது, அதை உரிய துறைகளுக்கு தெரிவிப்பதற்கான மென்பொருள் தயாரிக்கப்படுகிறது. சென்னை ஐ.ஐ.டி., உதவியுடன் இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இதில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதால், அரசு அனுமதித்ததைவிட, 6.96 கோடி ரூபாய் கூடுதலாக தேவைப்படும் என தெரியவந்துள்ளது.
இந்த நிதியை, நீர் வளத்துறை வாயிலாக அரசிடம் இருந்து பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த எட்டு மாதங்களில் இத்திட்ட பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.