ஈரோடு:'கடந்த நான்கு மாதமாக வேளாண் குறை தீர் கூட்டம் நடக்கவில்லை. தற்போதும் சடங்கு, சம்பிரதாயமாக நடக்கிறது' என, பாசன சபை தலைவர் குற்றம் சாட்டினார்.
ஈரோட்டில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் வேளாண் குறைதீர் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன சபை தலைவர் சுபி.தளபதி: கடந்த நான்கு மாதமாக கூட்டம் நடக்கவில்லை. தற்போதும் சடங்கு, சம்பிரதாயமாக நடக்கிறது.
பெருந்துறை, சத்தி, கோபி, பவானி பகுதி யில் பல ஆயிரம் விவசாய நிலம், வீடு, பிற நிலங்களை தங்களுக்கானது என வக்பு வாரியம் தவறாக அறிவித்துள்ளது.
அதை அளவீடு செய்து, உரியவர்கள் தங்களது நிலத்தை விற்க, வாங்க, பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க கோரியும் நடவடிக்கை இல்லை.
காளிங்கராயன் பாசன சபை தலைவர் வேலாயுதம்: காளிங்காராயனில் தரமான மதகு, 'வால்வு'களை அமைக்க வேண்டும்.
ஈரோடு பகுதியில் சாயக்கழிவு, தோல் கழிவு, சாக்கடை நீர் கலப்பதை தடுக்க அமைக்கப்பட்ட, பேபி வாய்க்காலில் குப்பை கொட்டி மூடி வைத்து சாயக்கழிவை வெளியேற்றுகின்றனர்.
அதை முழுமையாக துார்வாரி காக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.