சென்னை:சமூக வலைதளத்தில் சிறுமி குறித்து ஆபாச கருத்து வெளியிட்ட பெண்ணுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட 'போக்சோ' சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஸ்வதர்ஷினி, 38. இவர் சமூக வலைதளத்தில் சென்னையை சேர்ந்த பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.
பின் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விஸ்வதர்ஷினி அந்த பெண்ணின் மகள் குறித்து சமூக வலைதளங்களில் ஆபாசமாக சித்தரித்து கருத்து பதிவிட்டார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் 2018ல் ராயப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின் வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
விஸ்வதர்ஷினி மீது 'போக்சோ' மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு திருச்செங்கோட்டில் தலைமறைவாகி இருந்தவரை 2019 ஜூன் 11ல் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன் நடந்து வந்தது.
இரு தரப்பு வாதங்களுக்கு பின் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் 'குற்றம்சாட்டப்பட்ட பெண்ணுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.
சிறுமியின் பெயர் உள்ளிட்ட விபரங்களை வெளியிட்ட தனியார் 'டிவி' நிறுவனம் மீது, போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. தண்டனை பெற்ற விஸ்வதர்ஷினி, நடிகர் விஷாலுடன் பள்ளி சிறுமியை இணைத்து, சமூக வலைதளத்தில் ஆபாசமாக பதிவு செய்தவர்.