மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு, ஏப்ரல் 15 முதல் ஜூன் வரை, வாரத்தில் ஒரு நாள் மட்டும் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஊட்டிக்கு தினமும் காலை, 7:10 மணிக்கு மலை ரயில் இயக்கப்படுகிறது. தற்போது கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் மலை ரயிலில், இடம் கிடைக்காமல் ஏராளமான சுற்றுலா பயணியர் ஏமாற்றுத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே கோடை சீசன் முடியும் வரை, சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என, சுற்றுலா பயணியர் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து ஏப்ரல் 15 முதல், வாரத்தில் ஒரு நாள் மட்டும், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஏப்., 15ல் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை, 9:10 மணிக்கு புறப்படும் சிறப்பு மலை ரயில், கல்லாறு, குன்னூர், வெலிங்டன், கேத்தி, லவ்டேல் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்கள் வழியாக ஊட்டிக்கு மதியம், 2:25 மணிக்கு சென்றடைய உள்ளது.
அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை ஊட்டியில் இருந்து முற்பகல், 11:25 மணிக்கு புறப்பட்டு, மேட்டுப்பாளையத்திற்கு மாலை, 4:20 மணிக்கு சிறப்பு ரயில் வந்தடைய உள்ளது. இரண்டு மாதத்தில், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு, 11 முறையும், மறுமார்க்கத்தில் 11 முறையும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.