கோவை;'மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக கொள்கை - 2023, இந்தியாவை வலுவான பொருளாதாரமாக மாற்றும்' என, சைமா பாராட்டு தெரிவித்துள்ளது.
தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க (சைமா) தலைவர் ரவிசாம் வெளியிட்டுள்ள அறிக்கை:
வெளிநாட்டு வர்த்தக கொள்கை 2023 திட்டம் வெகுவாக பாராட்டுக்குரியது. இந்த புதுக் கொள்கை ஜவுளி மற்றும் ஆடைத்துறையின் உலகளாவிய போட்டித் தன்மையை தக்கவைக்க பெரிதும் உதவும்.
இ.பி.சி.ஜி., திட்டம் மற்றும் ஸ்பெஷல் அட்வான்ஸ் ஆதரைசேஷன் திட்டம் ஆகியவற்றின் கீழ் இறக்குமதி செய்தவர்கள், குறிப்பிட்ட காலத்துக்குள் ஏற்றுமதி அளவைப் பூர்த்தி செய்ய முடியாமல் போக நேர்ந்தால், அதற்கான ஒரு சமாதான திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.
ஏற்றுமதி அளவை பூர்த்தி செய்ய கூடுதல் மற்றும் சிறப்பு கூடுதல் வரியை தவிர்த்தல், அபராதத்தை தள்ளுபடி செய்தல் போன்ற அறிவிப்புகள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்னைகளில் இருந்து விடுபட ஜவுளி மற்றும் ஆடைத்துறைக்கு, குறிப்பாக நூற்பாலைகளுக்கு பெரிதும் உதவும்.
சில நாடுகளுடன் இந்திய ரூபாயில் செய்யப்படும் பணப்பரிவர்த்தனைகள், ஏற்றுமதியை அதிகரிப்பதோடு, அன்னிய செலாவணி விகிதத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தின் அபாயத்தைக் குறைக்கும்.
இதனால், சர்வதேச வர்த்தக பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசின் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை வணிகம் செய்வதை எளிதாக்கும்.
இந்தியாவை வலுவான பொருளாதாரமாக மாற்றும்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.