திருப்பூர்:கடன் உறுதி திட்டத்தில், 0.37 சதவீத வட்டியில், ஐந்து கோடி ரூபாய் வரை கடன் வழங்கும் அறிவிப்புக்கு, தொழில்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
நடப்பு நிதியாண்டுக்கான (2023-24) மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பில், குறு, சிறு நிறுவனங்களுக்கான கடன் திட்டம் மறுசீரமைக்கப்படுமென அறிவிக்கப்பட்டது.
அதன்படி, குறு, சிறு தொழில் நிறுவனங்கள் துவங்க கடன் உச்சவரம்பு அதிகரித்துள்ளது; வட்டியும் குறைக்கப்பட்டுஉள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:
மத்திய அரசு, குறு, சிறு தொழில் துவங்கும் தொழில் முனைவோரை ஊக்குவிக்கிறது. அதாவது, அரசு உத்தரவாதத்தில், கடன் உதவி வழங்கப்படுகிறது. இதுவரை, 2 சதவீத வட்டியில், ஒரு கோடி ரூபாய் வரை, பிணையமில்லாத கடன் வழங்கப்பட்டது.
பட்ஜெட்டில் அறிவித்திருந்த நிலையில், கடன் உறுதி திட்டத்தில், 0.37 சதவீத வட்டியில், ஐந்து கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது.
நாளை (இன்று) முதல் அமலுக்கு வரும் இத்தகைய அறிவிப்பால், எவ்வித பிணையமும் இல்லாமல், ஐந்து கோடி ரூபாய் வரை கடன் பெற்று, குறு, சிறு தொழில்களை துவங்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
மேலும், 10 லட்சம் ரூபாய் வரையிலான நிலுவை மீதான நடவடிக்கை தளர்த்தி, கடன் வழங்கும் அறிவிப்பால் பலரும் பயன்பெறுவர்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.