பல்லடம்,:பல்லடத்தில், 100 கோடி ரூபாய் மோசடி வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என, பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் - வடுகபாளையத்தைச் சேர்ந்த சேகர் மனைவி பிரவீணா, 36, திருப்பூரைச் சேர்ந்த தமிழரசன், 51, பல்லடம் அடுத்த வேலப்பகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த பழனிசாமி மகன்கள் சிவக்குமார், 43, விஜயகுமார், 43.
இவர்கள், சொத்துப் பத்திரங்களை அடமானம் வைத்து கடன் வாங்கித் தருவதாகக் கூறி, திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில், 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தனர்.
இது தொடர்பாக, கோவையைச் சேர்ந்த குமரேசன், 48, என்பவர் புகாரின்படி, திருச்சியில் பதுங்கியிருந்த பிரவீணா, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதில் தொடர்புடைய தமிழரசன், சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார்.
தலைமறைவாக உள்ள சிவக்குமார், விஜயகுமார், அவரது மகன் ராகுல் பாலாஜி ஆகியோரை தனிப்படை போலீசார் தேடுகின்றனர்.
பாதிக்கப்பட்டோர் கூறியதாவது:
மோசடியில் ஈடுபட்ட சிவக்குமார், விஜயகுமார் மற்றும் ராகுல் பாலாஜி ஆகியோருடன் மேலும் பலர் தொடர்பில் உள்ளனர். வங்கி அதிகாரிகள் சிலரும் இந்த மோசடிக்கு உறுதுணையாக இருந்து உள்ளனர்.
போலீசார் சிலரின் ஆதரவும் இவர்களுக்கு இருப்பதாக சந்தேகம் உள்ளதால், இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.