கூடலுார்:தர்மபுரியில் இருந்து கொண்டு வரப்பட்டு, முதுமலையில் பராமரிப்பில் இருந்து வந்த குட்டி யானை, திடீரென உயிரிழந்ததால் வனத்துறையினர் சோகமடைந்துள்ளனர்.
தர்மபுரி பொன்னகரம் வனப்பகுதியில் தாயை பிரிந்து தவித்துக் கொண்டிருந்த, 5 மாத ஆண் குட்டி யானையை, வனத்துறையினர் மீட்டு, தாயிடம் சேர்க்கும் பணியை மேற்கொண்டனர்.
பலன் கிடைக்காததால், 16ம் தேதி, நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு, கூட்டி வந்து பராமரித்து வந்தனர்.
இப்பணிகளை, 'ஆஸ்கார்' விருது பெற்ற 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவண படத்தில் இடம் பெற்ற யானை பாகன் பொம்மன் மற்றும்- பெல்லி தம்பதி மேற்கொண்டனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், குட்டி யானைக்கு வயிற்று போக்கு ஏற்பட்டது; கால்நடை மருத்துவக் குழு சிகிச்சை அளித்தது. சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் இறந்தது. யானை உடலை மருத்துவக் குழுவினர் உடல் கூராய்வு செய்தனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'குட்டி யானைக்கு பால் பவுடர் திரவ உணவாக வழங்கப்பட்டு வந்தது. செரிமானம் ஆகாமல் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. சிகிச்சை பலனின்றி இறந்து விட்டது' என்றனர்.