பழநி--பழநி நகராட்சியில் நடந்த அவசர கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர் காளீஸ்வரி தீர்மான நகலை வீசிவிட்டு வெளியேறினார்.
பழநி நகராட்சி அவசர கூட்டம் தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் கந்தசாமி, நகராட்சி கமிஷனர் கமலா, நகர்நல அலுவலர் மனோஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தேசிய தலைவர் ராகுல் எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்தது குறித்து கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகராட்சி பட்ஜெட் வாசிக்கப்பட்டது.
கவுன்சிலர்கள் விவாதம்:
சுரேஷ் (தி.மு.க.,): நகராட்சி நிர்வாகம் சார்பில் பட்ஜெட் தொடரில் நகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பேனா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேர்மன் உமா மகேஸ்வரி (தி.மு.க.,): நகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பேனா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
செபாஸ்டின் (தி.மு.க.,): அம்மா உணவகத்தின் செலவு தொகை கணக்கை மாதம் தோறும் மன்றத்திற்கு வழங்க வேண்டும்.
சேர்மன்: மன்றத்தில் செலவுத்தொகை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கந்தசாமி,துணைத் தலைவர் (மார்க்சிஸ்ட்): நகராட்சி பட்ஜெட் அறிக்கையை தமிழில் வழங்க வேண்டும்.
சேர்மன்: பட்ஜெட் அறிக்கையை தமிழில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சுரேஷ் (தி.மு.க.,): நகராட்சி பகுதியில் கழிப்பறை இல்லாத வீடுகள் எவ்வளவு.
மனோஜ்,நகர்நல அலுவலர்: பொதுக் கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சேர்மன்: வீடுகளுக்கு கழிப்பறை கட்டித்தர முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
சுபா, (தி.மு.க.,): எனது வார்டு பகுதியில் குடிநீர் சரியாக விநியோகிக்கப்படுவதில்லை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேர்மன் : குடிநீர் விநியோகம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
காளீஸ்வரி (தி.மு.க.,): எனது வார்டில் எந்த வேலையும் சரிவர நடைபெறவில்லை. ரேஷன் கடை அமைக்கப்படவில்லை. சாக்கடை சரிவரவில்லை. ஒப்பந்ததாரர் சரியாக பணிபுரியவில்லை.
சேர்மன்: சரியாக பணிபுரியாத ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
காளீஸ்வரி (தி.மு.க.,): எனது வார்டில் மட்டும் பணிகள் நடைபெறவில்லை. தாங்கள் பணிகள் செய்து தர இயலவில்லை. பொதுமக்களுக்கு பதிலளிக்க முடியவில்லை.
சேர்மன்: நகர மன்ற உறுப்பினர் மன்றத்தில் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
பஜ்லுார் ரகுமான் (தி.மு.க.,): எனது வார்டில் சுகாதார வளாகம் கடந்த பல மாதங்களாக சேதமடைந்துள்ளது. அவற்றை சரி செய்யவில்லை. ஆனால் பிற வார்டுகளில் பணிகள் நடைபெறுகிறது. நகராட்சி தலைவர் பாரபட்சமாக செயல்படுகிறார்.
காளீஸ்வரி (தி.மு.க.,): எனது வார்டில் பணிகள் சரியாக நடைபெறவில்லை.(தீர்மான நகலை மன்றத்தில் வீசி எறிந்து விட்டு, மன்ற கூட்ட அரங்கை விட்டு வெளியேறினார்.)
சேர்மன் : பாரபட்சமாக செயல்படவில்லை. அப்படி நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. தீர்மானங்களை தொடர்ந்து வாசிக்கவும்.
செபாஸ்டின் (தி.மு.க.,): சாலை பணிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.33 வார்டுகளுக்குமா. அல்லது குறிப்பிட்ட பகுதிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா.
சுப்பிரமணியபிரபு, நகராட்சி அலுவலர்: சாலை பணிகள் முழுவதுமாக நிறைவேற்ற அல்ல. பேட்ச் ஒர்க் உள்ளிட்ட பணிகள், தேவைப்படும் அத்தியாவசிய சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
செபாஸ்டின் (தி.மு.க.,): பாதாள சாக்கடை நடைபெற உள்ள நிலையில் சாலை பணிகள் நடைபெறுமா.
நகராட்சி அலுவலர்: பாதாள சாக்கடை பணிகள் திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் முழுமை பெறவில்லை.
பத்மினிமுருகானந்தம் (காங்.,): காங்.,தலைவர் ராகுலின் எம்.பி., பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு மன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி.
திருஆவினன்குடி அருகே உள்ள முடி காணிக்கை மையம், கோயில் கட்டுப்பாட்டில் உள்ளதா நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளதா.
சேர்மன்: அந்த இடம் நகராட்சிக்குரியது. கோயில் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.