கடலுார் : 'போராட்டங்கள் மூலம் பா.ம.க., இருப்பதாக காட்டிக்கொள்கிறது' என, வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.
கடலுாரில் அவர் கூறியதாவது:
அதானி என்ற தனி நபரை காப்பாற்ற, ஒட்டுமொத்த லோக்சபாவையே பா.ஜ., அரசு முடக்கி போடுவது தேச விரோத செயலாகும். எதிர்க்கட்சியின் கோரிக்கையின் மீது லோக்சபா கூட்டுக்குழு விசாரணைக்கு அனுமதி வழங்கி இருக்க வேண்டும். அதை விடுத்து, ராகுல் மீது அவதுாறு வழக்கு, எம்.பி., பதவி தகுதி நீக்கம் என்பது திட்டமிட்ட சதி என யூகிக்க முடிகிறது.
இதனை கண்டித்து வி.சி., கட்சி போராட்டங்கள் நடத்தி வருகிறது. வரும் ஏப்., 14 ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் 'ஜனநாயகம் காப்போம்' என்ற அறப்போராட்டத்திலும், அம்பேத்கர் சிலை முன்பு அமர்ந்து உறுதிமொழி ஏற்க உள்ளோம்.
தென்னிந்திய மாநிலங்களில் பா.ஜ., இனி அமர முடியாது. இது கர்நாடக மாநில சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும். வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., வை மக்கள் துாக்கி எறிவார்கள்.
என்.எல்.சி., விவகாரத்தில் விவசாயிகளுக்கு மன நிறைவு ஏற்படும் வகையில் தி.மு.க., தலைமையிலான கூட்டணிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. என்.எல்.சி., விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிர்வாகம் அகற்றப்பட வேண்டும் என பா.ம.க., கூறுவது நடைமுறைக்கு வராத செயல்திட்டம். போராட்டங்கள் வாயிலாக பா.ம.க., இருப்பதாக காட்டிக்கொள்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். கடலுார் துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.