கடலுார் : 'ஹெல்மெட் அணிந்து வருபவருக்கு மட்டுமே பெட்ரோல் போட வேண்டும்' என, கடலுார் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் கடந்த 27ம் தேதி நடந்தது. கூட்டத்தில், கடலுார் மாவட்டத்தில் இயங்கும் பெட்ரோல் பங்குகளில் 'நோ ஹெல்மெட், நோ பெட்ரோல்' மற்றும் 'நோ சீட் பெல்ட், நோ பியூல்' என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கண்டிப்பாக வைக்க வேண்டும்.
மேலும், ஹெல்மெட் அணிந்து வருபவருக்கு மட்டுமே பெட்ரோல் வழங்க வேண்டும் என, ஒவ்வொரு வட்டத்திலும், அந்தந்த தாசில்தார்கள் அறிவுறுத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.
அதன்படி, கடலுார் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு அந்தந்த பகுதி தாசில்தார்கள் இதுதொடர்பாக உத்தரவு கடிதம் அனுப்பியுள்ளனர். கடலுார் தாலுகா பகுதிகளில் இயங்கும் பெட்ரோல் பங்குகளுக்கு கடலுார் தாசில்தார் விஜய் ஆனந்த் அனுப்பியுள்ள கடிதத்தில், 'வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல் நிரப்ப வேண்டும். பெட்ரோல் நிலைய வளாகத்தில் இது தொடர்பாக விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகள் கண்டிப்பாக வைக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.