சிதம்பரம் : கடலுார் மாவட்டம், சிதம்பரம், ஆணிக்காரன் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகள் மகேஸ்வரி (எ) ஆயிஷா, 22; இவர், தனது குழந்தை மற்றும் உறவினர்களுடன் லப்பைத் தெரு பள்ளிவாசல் முன்பு நேற்று காலை திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சிதம்பரம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனஜா, சப் -இன்ஸ்பெக்டர் பொன்மகரம் மற்றும் போலீசார் ஆயிஷாவிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சிதம்பரம், அம்பலத்தாடி தெருவை சேர்ந்த ஆசிப் மகன் பக்கிம் அஸ்லாம்,25; என்பவரும் ஆயிஷாவும் காதலித்தனர்.
மதம் மாறினால் திருமணம் செய்து கொள்வதாக பக்கிம் அஸ்லாம் கூறியதால், மகேஸ்வரி தனது பெயரை ஆயிஷா என மாற்றினார்.
இருவருக்கும் இலப்பை தெரு பள்ளி வாசலில் திருமணம் நடந்தது. இதற்கு பக்கிம் அஸ்லாமின் தந்தை ஆசிப் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சில மாதங்கள் கழித்து ஆயிஷாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், பக்கிம் அஸ்லாம், ஆயிஷாவிற்கு தெரியாமல் வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது குறித்து 2 மாதங்களுக்கு முன் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், கணவருடன் சேர்ந்து வாழ வைக்க வேண்டும். கணவரின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆயிஷா மற்றும் அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டது தெரிந்தது. போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன் பேரில், ஆயிஷா போராட்டத்தை கைவிட்டார்.