நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில், 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், நடுவீரப்பட்டு அடுத்த சன்னியாசிபேட்டை ஜெயலட்சுமி நகரில், கடந்த சில தினங்களுக்கு முன், சன்னியாசிப்பேட்டை விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் கிரிக்கெட் விளையாடினர். அப்போது, அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது.
இதை அதே இடத்தில் கிரிக்கெட் விளையாடிய குயிலாப்பாளையம் காலனியை சேர்ந்த சந்துரு மற்றும் அவரது நண்பர்கள் விலக்கி விட்டனர். இது சம்மந்தமாக இருதரப்பினருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது.
நேற்று முன்தினம் மாலை, கிரிக்கெட் விளையாடும் போது, இரு தரப்பினருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சந்துரு மற்றும் அதேப் பகுதியை சேர்ந்த பிரதாப், அஜித், அசோக், தீனா, சண்முகபாண்டி மற்றும் சிலர் சன்னியாசிப்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவிற்கு சென்று அங்கிருந்த ராணி, சந்திரா உள்ளிட்ட சிலரது வீடுகளை கற்களை வீசி சேதப்படுத்தினர்.
தகவலறிந்த சன்னியாசிப்பேட்டை விக்னேஷ், வினோத், சஞ்சய், கவுதம் ஆகியோர் சந்துரு தரப்பை தட்டி கேட்டனர். இதில், இரு தரப்பினரும் தாக்கி கொண்டனர்.
பண்ருட்டி டி.எஸ்.பி., சபியுல்லா மற்றும் நடுவீரப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, கூட்டத்தை கலைத்தனர். இது குறித்து சன்னியாசிப்பேட்டை மோகன், குயிலாப்பாளையம் காலனி சந்துரு ஆகியோர் நடுவீரப்பட்டு போலீசில் தனித்தனியே புகார் அளித்தனர். அதன்பேரில், இரு தரப்பையும் சேர்ந்த 10 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
இந்நிலையில், வினோத்,22; விக்னேஷ்,25; பிரதாப்,25; சந்துரு,22, ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.