விழுப்புரம், : விழுப்புரம் கோர்ட்டில் பிரபல ரவுடிகள் ஆஜராக வந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டு வாகன சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்புநிலவியது.
விழுப்புரம் கே.கே., ரோடு கணபதி லே- அவுட்டை சேர்ந்தவர் செல்வராஜ், 44; தி.மு.க., நகர செயலாளர். இவரை கீழ்பெரும்பாக்கத்தைச் சேர்ந்த இருசப்பன் மகன் கலையரசன் தலைமையிலான கூலிப்படையினர் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி வெட்டிக் கொலை செய்தனர்.
இந்த கொலை தொடர்பாக கலையரசன் மற்றும் சென்னை எண்ணுாரை சேர்ந்த கூலிப்படை தலைவன் தனசேகர் உட்பட 14 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்கு, விழுப்புரம் வேடம்பட்டு சிறையில் இருந்து கலையரசன் மற்றும் அசார் என்கிற இமாம் ஒலி, கடலுார் சிறையில் இருந்து தனசேகர் ஆகியோர் போலீஸ் வாகனத்தில் வந்தனர்.
இதேபோல், கடலுார் சிறையில் உள்ள விழுப்புரத்தை சேர்ந்த பிரபல ரவுடி அறிவழகன், பத்தர் செல்வம், சவுந்தர் ஆகியோர் கொலை வழக்கில் ஆஜராக வாய்தா நேற்று அறிவிக்கப்பட்டது.
இதில், அறிவழகன் மற்றும் கலையரசன் தந்தை ரவுடி இருசப்பன் ஆகியோர் விழுப்புரத்தில் எதிரெதிர் தரப்பாக இருந்து வருகின்றனர். இதனால், அறிவழகன் மற்றும் கலையரசன் தரப்பினர் ஒரே நாளில் ஆஜராவதால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதற்காக ஏ.டி.எஸ்.பி., மற்றும் டி.எஸ்.பி., தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் கோர்ட் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும், விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்திற்கு சென்ற அனைத்து வாகனங்களையும் போலீசார் சோதனை செய்து அனுப்பினர். இதனால், பெருந்திட்ட வளாகத்தில் பரபரப்பு நிலவியது. ஆனால், அறிவழகன் கோர்ட்டில் ஆஜராக வரவில்லை.